திருச்சி அருகே கோயில் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்; ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

டெல்லி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோயில் விழாவின் போது இறந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தயம்பாளையத்தில் வண்டி கருப்புசாமி கோயில் உள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமிக்கு அடுத்த நாள் குறி சொல்லும் நிகழ்ச்சி நடைபெறும். 2வது நாள் பக்தர்களுக்கு பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். வரிசையாக வரும் பக்தர்களுக்கு கோயில் பூசாரி, கையில் சில்லறை காசுகளை (பிடிக்காசு) அள்ளிக் கொடுப்பார். இந்த காசுகளை வாங்கி சென்றால், நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பெண்கள் முந்தானையிலும், ஆண்கள் துண்டிலும் படிக்காசுகளை வாங்கிக்கொள்வார்கள். வருடந்தோறும் நடைபெறும் இந்த பிடிக்காசு வழங்கும் விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்தாண்டு நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமி தினமாகும். நேற்று கோயிலில் குறி சொல்லும் நிகழ்ச்சி நடந்த நிலையில், இன்று பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பேரிகார்டு போடப்பட்டிருந்தது. 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருச்சி மட்டுமின்றி  கரூர், நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்திருந்தனர். இன்று காலை 8 மணியளவில் பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி துவங்கியது. இதற்காக அதிகாலையிலேயே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். நிகழ்ச்சி துவங்கியதும் பக்தர்கள் பிடிக்காசு வாங்கிக்கொண்டு கோயிலில் தரிசனம் செய்து விட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். நேரம் ஆகஆக கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. பேரிகார்டு அமைத்திருந்தாலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. பேரிகார்டுக்குள்ளேயே முண்டியடித்துக்கொண்டு நின்றனர்.

9 மணியளவில் கோயிலுக்கு அருகில் 4 பஸ்கள் வந்து நின்றன. அதில் இருந்து இறங்கிய பக்தர்கள் அனைவரும், வேகமாக ஓடி வந்து வரிசையில் சேர்ந்தனர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பேரிகார்டில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் கீழே விழுந்தனர். அவர்கள் மீது பலர் விழுந்தனர். மேலே விழுந்து பலர் அமுக்கியதில் மூச்சு திணறியும், காலால் மிதிப்பட்டதில் ஏற்பட்ட காயத்தாலும் சேலத்தை சேர்ந்த கந்தாயி (38), பெரம்பலூரை சேர்ந்த  ராமர் (50), நாமக்கல்லை சேர்ந்த சாந்தி, கடலூரை சேர்ந்த பூங்காவனம் (50) மற்றும் ராஜவேல், கரூரை சேர்ந்த லட்சுமிகாந்தன் (55), விழுப்புரத்தை சேர்ந்த வள்ளி (35) ஆகிய 7 பேர் இறந்தவர்கள். மேலும், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களை 108 ஆம்புலன்ஸ்களில் உடனே துறையூர், திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தியதும், 1 மணி நேர தாமமத்துக்கு பின் மீண்டும் படிக்காசு வழங்கும் நிகழ்ச்சி துவங்கியது. இந்த விபத்து பற்றி துறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், விழாவின் போது, இறந்த 7 பேர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இறந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கிய காயமடைந்துள்ளவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி நிவாரணம்:

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோயில் விழாவின் போது இறந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 12 பேருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: