தேர்தல், சித்திரை திருவிழா பாதுகாப்பு ஆலோசனைக்கூட்டம் வாக்காளர்களுக்குப் பணம், பரிசு வழங்குவதை தடுக்க நடவடிக்கை: டிஜிபி அசுதோஷ் சுக்லா மதுரையில் பேட்டி

மதுரை: வாக்காளர்களை கவர பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, தேர்தலுக்கான டிஜிபி அசுதோஷ் சுக்லா மதுரையில் கூறினார். மக்களவை தேர்தல் மற்றும் சித்திரை திருவிழா பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேர்தலுக்கான டிஜிபி அசுதோஷ் சுக்லா  தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மக்களவை தேர்தலுக்கான போலீஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு ஏற்பாடுகள், சித்திரை தேரோட்ட திருவிழா நடைபெறும் பகுதியில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தென்மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்கள், 2 மாநகரங்களில் நடக்க உள்ள 7 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் டிஜிபி அசுதோஷ் சுக்லா அளித்த பேட்டி:

தென் மண்டலத்தில், 10 மக்களவை தொகுதிகள், இடைத்தேர்தல் நடைபெற உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம்  16,475 வாக்குச்சாவடிகள் 8,120 வாக்குப்பதிவு மையங்களில் அமைந்துள்ளது. இவற்றில் 1,455 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. 18ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மேலூர், மதுரை கிழக்கு, வடக்கு, தெற்கு, மத்தி, மேற்கு ஆகிய தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும். மதுரை தவிர்த்து, தென்மண்டலத்தில் உள்ள மற்ற தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தலின் போது வாக்குப்பதிவு எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்னையுமின்றி நேர்மையாகவும், அமைதியான முறையிலும் நடைபெற போலீசார், ஆயுதப்படை போலீசார், சிறப்பு காவல் படையினர் தேர்தல் விதிமுறைகளின்படி அமர்த்தப்படுவார்கள்.

மத்திய ஆயுத காவல் படையினர் பதற்றமான வாக்குப்பதிவு மையங்களில் கூடுதலாக பணியில் அமர்த்தப்படுவார்கள். தென்மண்டலத்தில் 109 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு மாவட்டம் மற்றும் மாநகர எல்லைக்குள் வரும் வாகனங்கள் உரிய முறையில் கண்காணிப்பு செய்யப்படுகிறது. 398 பறக்கும்படைகள் மற்றும் 197 நிலை கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை மற்றும் வாக்காளர்களை கவர பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிவிரைவுப் படை, 1522 மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, தேர்தல் அமைதியான முறையில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: