யாரிடமிருந்து எவ்வளவு நிதி கிடைத்தது? தேர்தல் பத்திரங்களின் விவரங்களை மே 30க்குள் தாக்கல் செய்ய வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் மூலம் யாரிடமிருந்து எவ்வளவு நிதி கிடைத்தது என்ற விவரங்களை மூடிய உறையில் வைத்து தேர்தல் ஆணையத்திடம் மே 30ம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் சமர்பிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி பெறுவதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்காக தேர்தல் பத்திரத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது. இதன்படி, தனிநபரோ அல்லது குழுவாகவோ, நிறுவனங்களோ குறிப்பிட்ட வங்கியிலிருந்து தேர்தல் பத்திரத்தை வாங்கி அவற்றை கட்சிகளுக்கு வழங்கலாம். அவற்றை பெற்றுக் கொள்ளும் கட்சிகள், 15 நாட்களுக்குள் தங்களின் வங்கி கணக்கில் செலுத்தி பணமாக மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம், தேர்தல் நிதியில் கருப்பு பணம் நுழைவதை தடுக்க முடியும் என்ற மத்திய அரசு, தேர்தல் பத்திரத்தை அமல்படுத்த வருமான வரி மற்றும் கம்பெனி சட்டத்தில் பல்வேறு திருத்தங்களையும் மேற்கொண்டது. இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக்கூறி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேர்தல் பத்திரம் வழங்க தடை விதிக்க வேண்டும் அல்லது நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்ஜிவ் கண்ணா ஆகியோர் கொண்ட நேற்று அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷண், ‘‘தேர்தல் நிதியில் கருப்பு பணம் புழங்குவதை தடுக்க இத்திட்டம் எதுவும் செய்யவில்லை. நன்கொடை தந்தவர்களின் பெயர்கள் ரகசியமாகவே வைக்கப்படுகின்றன. இம்முறை இத்திட்டத்தில் அதிக நிதி பெற்றது மத்தியில் ஆளும் கட்சிதான்’’ என்றார்.மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, ‘‘தேர்தல் நிதியில் கருப்பு பணம் புழங்குவதை தடுக்க கொண்டு வரப்பட்ட சீர்த்திருத்த நடவடிக்கை இது. இதில் நன்கொடை அளித்தவரின் பெயர் ரகசியமாக வைக்கப்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒரு நிறுவனம் நன்கொடை அளித்த கட்சி தோற்கும்போது, புதிய அரசால் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் தோன்றும். இது நன்கொடை வழங்குவதை பாதிக்கும். எனவே, பெயர்கள் ரகசியமாக வைக்கப்படுகின்றன. தற்போது தேர்தல் நடந்து வரும் நிலையில் இந்த நேரத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது. தேர்தல் முடிந்த பின் விசாரிக்க வேண்டும்’’ என்றார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வக்கீல் ராகேஷ் திவேதி ஆஜராகி, நன்கொடை வழங்குபவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்றார். அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், ‘‘தேர்தல் பத்திரம் வாங்குபவர்களின் அடையாளம் தெரியப்படுத்தாமல் இருந்தால், கருப்பு பணத்தை தடுக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் வீணாகி விடுமே’’ என கருத்து தெரிவித்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நேற்று முன்தினம் ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில், ‘‘அனைத்து கட்சிகளும் தேர்தல் பத்திரம் மூலம் எவ்வளவு நிதி பெற்றுள்ளன, நன்கொடை கொடுத்தவர்களின் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை மூடிய உறையில் வைத்து வரும் மே 30ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். இத்திட்டத்திற்காக வருமான வரி, தேர்தல், வங்கிகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களும் ஆய்வு செய்யப்படும். ஏப்ரல்-மே மாதத்தில் தேர்தல் பத்திரத்தை விற்கும் கால அளவை 10 நாட்களில் இருந்து 5 நாட்களாக நிதி அமைச்சகம் குறைக்க வேண்டும்’’ என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன் மூலம், தேர்தல் முடியும் வரை இவ்விவகாரத்தில் தலையிடக்கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை நீதிமன்றம் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் வரவேற்பு

உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், ‘‘இதை நாங்கள் வரவேற்கிறோம். தேர்தல் நிதியில் வெளிப்படைத்தன்மையை நாங்கள் பின்பற்றுகிறோம். நீதிமன்ற உத்தரவின் மூலம், பாஜவுக்கு எப்படி இவ்வளவு நிதி கிடைத்தது என்பதை வெளிப்படுத்தும். அதன்மூலம், பாஜவுக்கும் தொழிலதிபர் நண்பர்களுக்கும் உள்ள நெருக்கம் வெளிப்படும்’’ என்றார்.

தீர்ப்புக்கு கட்டுப்படுகிறோம்’

பாஜ செய்தித் தொடர்பாளரும் வக்கீலுமான நளின் கோஹ்லி கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்றத்தின் எந்த உத்தரவுக்கும் கட்டுப்படுகிறோம். இதில் அரசு தரப்பில் சில விஷயங்கள் வலியுறுத்தப்பட்டு உள்ளன. இறுதி தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: