ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி தலைவர் பிரபல கவிஞர் குமார் விஷ்வாஸ் மனோஜ் திவாரியுடன் சந்திப்பு: பிரசாரம் செய்ய பாஜ அழைப்பு

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், பிரபல கவிஞருமான குமார் விஷ்வாஸ், மக்களவை தேர்தலில் பாஜ கட்சிக்கு பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மிக முக்கியமான முன்னணி தலைவர்களில் பிரதானமானவர் கவிஞர் குமார் விஷ்வாஸ். முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவராக இருந்த விஷ்வாஸ், தற்போது கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிருப்தி தலைவராக மாறி ஒதுங்கி உள்ளார். இதனை பாஜ கட்சி பயன்படுத்திக்கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே ஆம் ஆத்மியின் அதிருப்தி எம்எல்ஏ கபில் மிஸ்ரா பாஜவுடன் இணைந்து ஆம் ஆத்மிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், குமார் விஷ்வாசுக்கு மக்களவை தேர்தலில் கிழக்கு டெல்லியில் போட்டியிட வாய்ப்பு வழங்கு ஆலோசித்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனை உறுதி செய்யும் விதமாக, நேற்று முன்தினம் குமார் விஷ்வாசை பாஜ மாநில தலைவர் மனோஜ் திவாரி சந்தித்து பேசினார். அப்போது பாஜ கட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்ய அழைத்ததாக தெரிகிறது. இதுபற்றி பாஜ கட்சி வட்டாரங்கள் கூறுகையில், “கவிஞர் விஷ்வாஸ், கடந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மிக முக்கிய பங்கு வகித்தார். ஆம் ஆத்மி கட்சிக்காக அவர் பிரசாரம் செய்தபோது அவருக்காக பெரும் மக்கள் கூட்டம் கூடியது. இதனை பயன்படுத்தக்கொள்ள பாஜ தயாராக உள்ளது. எனவே, அவர் பாஜவுக்காக பிரசாரம் செய்வதால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். மேலும், அவருக்கு கட்சியில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது”  என தெரிவித்தனர். குமார் விஷ்வாஸ் தவிர, ஹர்யான்வி பாடகர் சப்னா சவுத்ரியும் பாஜ கட்சிக்காக பிரசாரம் செய்ய உள்ளார் என பாஜ கட்சி வாட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: