எந்த கடவுளுக்கும் எதிர்ப்பாக காங்கிரஸ் இருந்தது கிடையாது: தேர்தல் பிரச்சார கையேட்டை வெளியிட்டு கே.எஸ்.அழகிரி பேச்சு

சென்னை: எந்த கடவுளுக்கும் எதிர்ப்பாக காங்கிரஸ் இருந்தது கிடையாது என்று தேர்தல் பிரச்சார கையேடு வெளியீட்டு விழாவில் கே.எஸ்.அழகிரி பேசினார்.  நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக காங்கிரஸ் சார்பில் ‘அலங்கோல ஆட்சிகளை அகற்றுவோம்’ என்ற தேர்தல் பிரச்சார கையேடு வெளியீட்டு நிகழ்ச்சி சத்தியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கையேட்டினை வெளியிட்டார். இதில், முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, திமுக எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன், மார்க்சிஸ்ட் கட்சி  எம்பி டி.கே. ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, சிரஞ்சீவி, தாமோதரன், ஜி.கே.தாஸ், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், வீரபாண்டியன் உட்பட பலர் கலந்து  கொண்டனர். நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: காங்கிரஸ் கட்சி எப்போதும் எந்த கடவுளுக்கும் எதிர்ப்பாக இருந்தது கிடையாது. மக்கள் அவர்கள் விரும்பும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லலாம். எந்த ஒரு அரசும் சாதி, மதம் சார்ந்து செயல்படக்கூடாது. அப்படி செயல்பட்டு  வந்திருந்தால் நாடு எப்போதோ சிதறிபோய் இருக்கும். தற்போது ஆட்சியில் உள்ள பாஜ இந்து மதத்தை முன்னிறுத்துகிறது.

 பாஜ ஆட்சி நீடித்தால், நாட்டின் அரசியலமைப்பு சட்டம், வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய பண்பாட்டையே அவர்கள் மாற்றி விடுவார்கள். எனவே, இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில்  மதசார்பற்ற கூட்டணியை அமைத்துள்ளோம். பணநாயகத்தை ஜனநாயகம் வெல்லும்.  இந்த தேர்தலில் தமிழகத்தில் 40 இடங்களில் மதசார்பற்ற கூட்டணி தான் வெற்றி பெறும். ராகுல்காந்தி தமிழகத்துக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள மீண்டும் வருகிறார். இதற்கான தேதி இன்னும் இறுதி செய்யவில்லை.  தேர்தலில் முறைகேடு செய்ய முயற்சித்தால் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே எந்தவித முறைகேடும் நடக்காமல் உரிய நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்க  வேண்டும்.

 இவ்வாறு அவர் பேசினார்.   திமுக எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், ‘‘மத்திய, மாநில அரசுகளின் அலங்கோலங்களை இந்த பிரச்சார கையேடு தோலுரித்து காட்டியுள்ளது. இந்த பிரச்சார கையேட்டை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த ஆட்சி இருக்கும் வரையில் நாடு முன்னேற வாய்ப்பில்லை. பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது.  அப்படிப்பட்ட இந்த அரசை நாம் ஒருங்கிணைந்து அகற்ற வேண்டும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: