பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பார் நாகராஜிடம் 2 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை

கோவை: பொள்ளாச்சி, பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய அ.தி.மு.க மாஜி நிர்வாகி பார் நாகராஜிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒருவரை, காரில் கடத்தி சென்று ஆபாசமாக போட்டோ எடுத்து  தங்க நகை பறிக்கப்பட்டது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிேயார் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் திருநாவுக்கரசு கும்பலுக்கு ஆதரவாக மாணவியின் அண்ணன் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்திய பொள்ளாச்சி பகுதி அ.தி.மு.க நிர்வாகி பார் நாகராஜ் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவானது. பார் நாகராஜூக்கும் பலாத்கார சம்பவத்தில் தொடர்பு இருந்தது தெரியவரவே, வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணியளவில் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் அவர் ஆஜரானார். விசாரணை முடிந்து இரவு 8.30 மணியளவில் வெளியே வந்தார். அவரிடம் 2 மணி நேரம் நடந்த விசாரணை குறித்து நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கு பார் நாகராஜ், ‘‘என்னிடம் விசாரணையின்போது போலீசார் சில கேள்வி கேட்டார்கள். அதற்கு எனக்கு தெரிந்த பதில்களை கூறினேன். அவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் பதில் கூறியிருக்கிறேன். சமீபத்தில் வெளியான பெண்ணின் ஆடியோ தொடர்பாகவும் என்னிடம் கேட்டார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளை என்னால் வெளியே முழுவதும் தெரிவிக்க முடியாது’’ என்று பதில் அளித்தார்.

பலாத்காரம் செய்தபோது இறந்த சிறுமியின் சடலம் புதைப்பு? திருநாவுக்கரசு வீட்டின் பின்புறம் தோண்டி பார்க்க சிபிசிஐடி திட்டம்:

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோ வாக்குமூலம் அடிப்படையில், திருநாவுக்கரசின் வீட்டின் பின்புறம் சிறுமியின் உடல் புதைக்கப்பட்டதா என்பது குறித்து சோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்களால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நேற்று முன்தினம் பரபரப்பு ஆடியோ வாக்குமூலம் வெளியிட்டுள்ளார். அதில் திருநாவுக்கரசு கும்பலால் தானும் தன்னுடன் 4 இளம் பெண்களும் அவருடைய பண்ணை வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தோம். அப்போது தொடர் பாலியல் பலாத்காரத்தால் இறந்த சிறுமியின் உடலை திருநாவுக்கரசின் பண்ணை வீட்டின் பின்புறம் புதைத்தனர் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோ குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் கூறுகையில், ``பெண்ணின் ஆடியோ குறித்து எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை. இருப்பினும் வழக்கின் முக்கியத்துவம் கருதி ஆடியோவில் அந்த பெண் குறிப்பிட்ட திருநாவுக்கரசின் வீட்டின் பின்புறத்தை தோண்டிப்பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: