தமிழகத்தின் 23 மாவட்டங்களில் தேர்தல் பணிக்கான நேர்முக உதவியாளர் நியமனம் செய்யாமல் தாமதம்: கோப்புகள் தேக்கம்

திருவண்ணாமலை: தமிழகத்தின் 23 மாவட்டங்களில் தேர்தல் பணிக்கான நேர்முக உதவியாளர் பணி நியமனம் நடைபெறவில்லை.  அதனால், மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் கோப்புகள் தேங்கிக்கிடக்கின்றன. சட்டமன்ற மற்றும் மக்களவை பொதுத்தேர்தல் நடைபெறும் போது, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க மாவட்ட அளவில் உதவி கலெக்டர்  நிலையிலான அதிகாரிகளை, நேர்முக உதவியாளர் (தேர்தல்) எனும் பணியிடத்தில் நியமனம் செய்வதும், தேர்தல் அட்டவணை வெளியிட்டதும்,  உடனடியாக இந்த பணியிடம் நிரப்புவது வழக்கம். இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு மற்றும் அட்டவணையை கடந்த 10ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அறிவிப்பு  வெளியான நேரத்தில் இருந்து, தேர்தல் நடத்தை விதிமுறையும் அமலுக்கு வந்தது. அதையொட்டி, பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள்,  கட்டுப்பாட்டு அறை என தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால், இந்த பணிகளை எல்லாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைக்க வேண்டிய, நேர்முக உதவியாளர்(தேர்தல்) பணியிடம், இன்னும் 23  மாவட்டங்களில் நிரப்பவில்லை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை, நெல்லை, மதுரை, சேலம் ஆகிய 9 மாவட்டங்களில் மட்டும்  நேர்முக உதவியாளர்(தேர்தல்) பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேர்தல் செலவு கணக்கு  பார்வையாளர்களும் பணிக்கு வந்துவிட்டனர்.

ஆனால், துணை கலெக்டர் நிலையிலான அதிகாரியை, நேர்முக உதவியாளர்(தேர்தல்) பணியிடத்தில்  நியமிக்காததால், தாசில்தார் நிலையிலான அதிகாரி, மாவட்ட தேர்தல் பிரிவு பணிகளை கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், இரண்டு மக்களவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும்  அதிகபட்சம் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளடங்கியிருக்கிறது. எனவே, இவ்வளவு பெரிய பணியை தாசில்தார் நிலையிலான அதிகாரி நிர்வகிப்பதில்  பல்வேறு நடைமுறை சிக்கல் இருக்கிறது. மேலும், தேர்தல் பணி தொடர்பான பல்வேறு கோப்புகளில், நேர்முக உதவியாளர் (தேர்தல்) கையெழுத்திட்டால் மட்டுமே தேர்தல் ஆணையம் ஏற்கும்.  எனவே, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் அலுவலகங்களில் கோப்புகள் தேங்கியிருக்கின்றன.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 27 நாட்களே உள்ளன. இன்னும் சில நாட்களில் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்து, இறுதி  வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டிய நிலை  இருக்கிறது. எனவே, துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகளை உடனடியாக 23 மாவட்டங்களிலும் தேர்தல் பணிக்கான நேர்முக உதவியாளர்களை பணி  நியமனம் செய்ய வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: