மகளிரணி ஆளுக்கொரு ஓட்டு, ஜெயலலிதாவுக்காக ஒரு ஓட்டு : முதல்வர் எடப்பாடி கடிதம்

சென்னை: ஆளுக்கொரு ஓட்டு, ஜெயலலிதாவுக்காக ஒரு ஓட்டு என மூன்று கோடி வாக்குகள் பெற அதிமுக மகளிரணியினர் பாடுபட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றரைக்கோடி தொண்டர்களை ெகாண்டிருக்கும் அதிமுக இயக்கத்தின் உயிர்நாடி தாய்மார்கள் தான். அந்த தாய்மார்களுக்கு அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளது. அதிமுக அரசு பெண்ணினத்திற்கு ஆற்றிவரும் பெரும்தொண்டையும், பெண்கள் முன்னேற்றத்திற்காக மேற்கொண்டு வரும் முன்னெடுப்புகளையும், முயற்சிகளையும் தமிழக மக்களிடம் எடுத்துரைக்க வேண்டுகிறேன். எனக்கு பின்னாலும், நூறாண்டுகள் அதிமுகதான் தமிழகத்தை ஆளும் என்கிற கடைசி சூளுரையை பேரவையில் முன்வைத்துவிட்டு ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்துவிட்டாலும், தனது சபதத்தை தான் மடியிட்டு வளர்த்த இயக்கத்தின் தான் பெற்றெடுத்திடா பிள்ளைகள் நிறைவேற்றி காட்டுவார்கள் என்னும் ஜெயலலிதா நம்பிக்கை மெய்யாக்கிட நடைபெற இருக்கின்ற 18 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும், நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் அதிமுக அமைத்திருக்கும் கூட்டணிக்கு ஒட்டுமொத்த தமிழகத்தின் தாய்மார்கள் வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கான நிரந்தர வைப்பு நிதியாக்கிட மகளிரணி சகோதரிகள் அல்லும் பகலுமாய் உழைக்க வேண்டும்.

தாய்மார்களின் ஓட்டுகளை கடுகளவும் குறையாது கொண்டு வந்து சேர்த்திட, அதிமுக மகளிர் சிப்பாய்ப்படை களப்பணி ஆற்ற வேண்டும் என உங்கள் அன்பு சகோதரனாக அன்பு கட்டளையிடுகிறேன். அதிமுக அரசின் தேர்தல் அறிக்கையின் மூலம் நாம் நிறைவேற்ற காத்திருக்கும் மாதம் ரூ.1,500 உதவித்தொகை, மாணவர்களின் கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல், 7 பேர் விடுதலை போன்ற திட்டங்கள வீடு வீடாக எடுத்துரைக்க வேண்டும். ஆளுக்கொரு ஓட்டோடு ஜெயலலிதாவுக்காக ஒரு ஓட்டு என மூன்று கோடி வாக்குகளுக்கு மேல் பெற்று 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி குவிக்க, எனதருமை வீரம் குன்றா வேலுநாச்சிகளே, தீரமிக்க தில்லையாடி வள்ளியம்மைகளே, விண்முட்ட வந்தாலும் விழி சிமிட்டா வீரத்திருமகளாம் ஜெயலலிதா பாசறையில் பயின்ற எனதருமை சகோதரிகளே புறப்படுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: