அரசு குடோனில் இருந்து கடத்திய ரூ.பல கோடி செம்மர கட்டைகள் பறிமுதல்

திருவொற்றியூர்: சென்னை மாதவரம் 200 அடி சாலை மேம்பாலம் அருகே மத்திய அரசுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு உள்ளது. கடந்த 2 வருடங்களுக்கு முன் எண்ணூர் துறைமுகத்தில் வெளிநாடுகளுக்கு கன்டெய்னரில் கடத்தப்பட இருந்த பல கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகளை கன்டெய்னருடன் கைப்பற்றி, மாதவரம் சேமிப்பு கிடங்கில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். இதற்கிடையே, கடந்த 4-ம் தேதி இரவு ஒரு கும்பல் கன்டெய்னர் பெட்டியை உடைத்து, அதில் பறிமுதல் செய்து வைத்திருந்த பலகோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை கடத்தி சென்றது. இதுகுறித்து மாதவரம் போலீசில் கிடங்கு மேலாளர் பிரியா ஜேக்கப் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செம்மரக் கட்டைகளை கடத்திய கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் ஜவஹர், சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அக்கிடங்கில் 24 மணி நேரமும் செக்யூரிட்டிகளின் பாதுகாப்பில் இருந்தும், அங்கு கன்டெய்னரில் இருந்து செம்மரக் கட்டைகள் கொள்ளை போனதால், அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் துணையுடன் கடத்தல் நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.இந்நிலையில், மீஞ்சூர் அருகே கவுண்டர்பாளையத்தில் ஒரு தனியார் குடோனில் கொள்ளைபோன செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றிரவு அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.அப்போது அந்த குடோனில் கடத்தப்பட்ட செம்மரக்கட்டைகள் தவிர, மேலும் பலகோடி மதிப்பிலான சந்தனம் உள்ளிட்ட பல்வேறு மரங்களின் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக செம்மரக் கட்டை கடத்தலில் ஈடுபட்ட ராஜேஷ், பூபதி உள்பட  3 பேரை சுங்கம் வனத்துறை மற்றும் போலீசார் பிடித்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: