பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு : கல்லூரி கனவுடன் கலைந்து சென்ற மாணவர்கள்

ஈரோடு: பிளஸ்2 பொதுத்தேர்வு முடிந்ததையடுத்து கல்லூரி கனவுடன் மாணவ-மாணவிகள் பள்ளியை விட்டு கலைந்து சென்றனர். ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 1ம் தேதி துவங்கியது. இத்தேர்வினை மாவட்டத்தில் உள்ள 214 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 756 மாணவர்கள், 13 ஆயிரத்து 36 மாணவிகள் என மொத்தம் 24ஆயிரத்து 792 பேர் தேர்வு எழுதினர். இதில் இறுதி தேர்வாக நேற்று வரலாறு, உயிரியல், வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல், கணக்கு தணிக்கை பாட பிரிவுக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வின் வினாத்தாள் திருத்தும் பணிகள் 29ம் தேதி முதல் துவங்குகிறது.

வினாத்தாள் ஈரோடு, சத்தியமங்கலம் என இரண்டு இடங்களில் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இறுதி தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றதையொட்டி, மாணவ, மாணவிகள் பள்ளிப்படிப்பு காலம் நிறைவடைந்த மகிழ்ச்சியில், உற்சாகமாக வெளியே வந்தனர். சக மாணவமாணவிகளிடம் கல்லூரி கனவுகள் குறித்தும் கலந்து பேசி கலைந்து சென்றனர். இதில் சிலர் பிரிய மனமின்றி மாணவிகள் சிலர் தங்கள் தோழிகளை கட்டிப்பிடித்து கண்ணீருடன் விடை பெற்றனர். மேலும், ஒரு சில பள்ளிகளில் மாணவமாணவிகள் உற்சாகத்துடன் ஒருவருக்கொருவர் பேனா மையை தெளித்து விளையாடி மகிழ்ச்சியாக சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: