லோக்பால் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஸை நியமனம் செய்தார் ஜனாதிபதி

புதுடெல்லி: இந்தியாவின் முதல் லோக்பால் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஸை குடியரசுத் தலைவர் ராம்நாத்  கோவிந்த் நியமித்துள்ளார். அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் ஊழல் செய்தால் விசாரிக்கும் அமைப்பாக மாநிலங்களில் லோக்  ஆயுக்தாவும், மத்தியில் லோக்பால் அமைப்பும் உருவாக்கும்படி 2017ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த லோக்பால் விசாரணை வளையத்திற்குள்  பிரதமரும் வருகிறார். ஆனால், லோக்பால் அமைக்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வந்தது. கடைசியாக கடந்த 7ம் தேதி நடந்த விசாரணையின்போது,  லோக்பால் தலைவர் மற்றும் பெயர்களை இறுதி செய்வதற்காக தேர்வுக்குழு கூட்டத்தை கூட்ட மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 10 நாட்கள் கெடு  விதித்திருந்தது. இதையடுத்து, கடந்த வெள்ளியன்று மாலை தேர்வுக்குழுவின் கூட்டத்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது.

ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து தரப்படாததால் அக்கட்சியின் மக்களவை குழு தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவை தேர்வுக்குழு  கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும்படி அரசு அழைப்பு விடுத்திருத்திருந்து. ஆனால் சிறப்பு அழைப்பாளருக்கு லோக்பால் நியமிக்கும்  விஷயத்தில் எந்த பங்களிப்பும் கிடையாது என்பதால் கூட்டத்தில் பங்கேற்பதற்கு ஏற்கனவே 6 முறை மல்லிகார்ஜூன கார்கே மறுத்த நிலையில் 7வது  முறையாக மீண்டும் மறுத்துவிட்டார். எதிர்க்கட்சிகளின் பிரதிநிதி இல்லாமல் லோக்பால் உறுப்பினர்களை தேர்வு செய்யக்கூடாது எனவும் அவர்  கூறினார்.

இந்நிலையில், லோக்பால் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோசை நியமிப்பது தொடர்பாக தீவிர பரிசீலனை செய்யப்பட்டு  வருவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இன்று அவரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் லோக்பால் தலைவராக நியமித்து  உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த அர்ச்சனா ராமசுந்தரம், இந்திரஜித் பிரசாத் கவுதம் மற்றும் திலீப் பி.போஸலே, பிரதீப்குமார் மொகந்தி, அபிலஷா குமாரி, அஜய்குமார் திரிபாதி, தினேஷ்குமார் ஜெயின், மகேந்திர சிங் ஆகிய 9 பேரை லோக்பால் உறுப்பினர்களாக குடியரசுத்  தலைவர் நியமித்துள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த பினாகி சந்திர கோஷ் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றார் என்பது  குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: