திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுர தூண் விரிசலை சரிசெய்ய தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுர கல் தூணில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்ய தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு செய்தனர்.உலகமே வியக்கும் கற்கோயில் கட்டுமான நுட்பங்களுக்கு சான்றாக உள்ளது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இக்கோயிலின் நான்கு திசைகளிலும் பிரதான கோபுரங்களும், உட்பிரகாரங்களில் 5 சிறிய கோபுரங்களும் உள்ளன. பல்வேறு மன்னர்களின் ஆட்சி காலங்களில் அண்ணாமலையார் கோயில் கட்டியதால்  ஒவ்வொரு பிரகாரமும், ஒவ்வொரு வகையில் தனிச்சிறப்புடன் அமைந்திருக்கிறது. 217 அடி உயர ராஜ கோபுர, 144 அடி உயர பே கோபுரம், 171 அடி உயர அம்மணி அம்மன் கோபுரம், 157 அடி உயரத்தில் திருமஞ்சன கோபுரம் கட்டப்பட்டுள்ளது. நான்கு கோபுரங்களையொட்டி அமைந்துள்ள 4 கட்டை கோபுரங்களும் தலா 70 அடி உயரமாகும்.

இந்நிலையில் அம்மணி அம்மன் கோபுரத்தின் பக்கவாட்டு கல் தூணில், கொடிமங்கை சிலை அமைந்துள்ள பகுதியில் லேசான விரிசல் இருப்பது 2002ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. என்றாலும் இந்த விரிசல் தற்போது அதிகரித்து வருகிறது. எனவே இதை சரி செய்யும் பணியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டது. அதன்படி, அறநிலையத்துறை கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகாயினி, தொல்லியல் துறை ஆய்வாளர் வசந்தி, கோயில் இணை ஆணையர் இரா.ஞானசேகர் உள்ளிட்ட குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.இதுகுறித்து கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகாயினி கூறுகையில், `அம்மணி அம்மன் கோபுர பக்கவாட்டு தூணில் ஏற்பட்டுள்ள விரிசலால் கோபுரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனாலும் இதனை ஆரம்ப நிலையிலேயே சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுத்திருக்கிறோம். கடுக்காய் உள்ளிட்ட இயற்கை பொருட்களை பயன்படுத்தி இந்த விரிசல் சரி செய்யப்படும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: