பாரிக்கர் மறைவை அடுத்து கோவாவில் அரசியல் நெருக்கடி: முதல்வர் பதவியை பெற விரும்பும் கூட்டணி கட்சி எம்எல்ஏ!

பனாஜி: முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானதை அடுத்து கோவாவில் ஆட்சியை தக்கவைக்க பாரதிய ஜனதா கட்சியும், ஆட்சியை கைப்பற்ற தனிப்பெரும் கட்சியான காங்கிரசும் தீவிரம் காட்டி வருவதால் திடீர் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் தனிப்பெரும் கட்சி என்ற முறையில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென்று ஆளுநர் மிருதுளா சின்காவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆட்சியை தக்கவைக்க ஆளும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி கட்சிகை அணுகியுள்ளது. இதற்காக பனாஜி வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்களுடன் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை ஆலோசனை நடத்தினார். ஆனால், முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

கூட்டணி கட்சியான மகாராஷ்டிரவதி கோமண்டக் கட்சியைச்(எம்.ஜி.பி) சேர்ந்த எம்.எல்.ஏ சுதின் தவாலிகர் முதலமைச்சர் பதவி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த தகவலை, துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார். ஆனால், பாரதிய ஜனதா கட்சியை சேர்நதவரே முதலமைச்சர் என்பதில் அந்த கட்சி உறுதியாக இருப்பதால் முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையில், பாஜகவில் முதல்வர் பதவிக்கு விஸ்வஜித் ரானே, பிரமோத் சாவந்த் ஆகியோரின் பெயர்களை எம்எல்ஏக்கள் முன்மொழிந்துள்ளனர். கோவா சட்டமன்றத்தின் தற்போதைய பலம் 36 ஆகும். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 14 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய பலம் 12. கூட்டணி கட்சிகளான மகாராஷ்டிரவதி கோமண்டக் கட்சி, கோவா முன்னேற்றக் கட்சி ஆகியவற்றுக்கு தலா 3 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தேசியவாத காங்கிரஸ் ஒரு எம்எல்ஏ வைத்துள்ளது. ஆட்சியமைக்க தேவையான எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 19 என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: