உமாமகேஸ்வரி மீண்டும் போட்டியிடுவாரா? விளாத்திகுளத்துக்கு ஆள் தேடும் அமமுக

விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் உமாமகேஸ்வரி போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை ஓட்டப்பிடாரம் தொகுதி சுந்தர்ராஜ், விளாத்திகுளம் தொகுதி உமாமகேஸ்வரி ஆகிய இருவரும் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள். இதில் வழக்கு காரணமாக ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் விளாத்திகுளம் தொகுதிக்கு ஏப்.18ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தொகுதியில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் நேரடியாக போட்டியிடுகிறது.

இந்த தொகுதியை பொறுத்தவரை ரெட்டியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம். பெரும்பாலும் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களே தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். அதன் அடிப்படையில் தான் விளாத்திகுளம் யூனியன் சேர்மன் பதவியில் இருந்த உமா மகேஸ்வரிக்கு கடந்த முறை அதிமுக வேட்பாளர் யோகம் கிடைத்தது. தற்போது அமமுகவில் உள்ள அவருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐகோர்ட் தீர்ப்பு வந்தபோது குற்றாலத்தில் இருந்த உமா மகேஸ்வரி ரிசார்ட்டில் இருந்து முதன் முதலாக வெளியேறினார். எனவே அவருக்கு இந்த முறையும் அமமுக வாய்ப்பு வழங்குமா என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. டாக்டர் ஜோதிமணி என்பவரும் அமமுகவில் சீட் பெற முயற்சித்து வருகிறார். வெளிநாட்டில் இருந்து வந்த இவர் அமமுக சார்பில் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். இதனால் யாருக்கு சீட் வழங்குவது என அமமுக யோசித்து வருகிறது. இன்று அமமுக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதற்கு பின்னரே விளாத்திகுளம் தொகுதியில் யார் போட்டி என்பது தெரியவரும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: