சையது முஷ்டாக் அலி டி20 டெல்லியை வீழ்த்தியது கர்நாடகா: பெங்கால், விதர்பா வெற்றி

இந்தூர்: சையது முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரின் சூப்பர் லீக் பி பிரிவு ஆட்டத்தில், கர்நாடகா 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.எமரால்டு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற கர்நாடகா முதலில் பந்துவீசியது. அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 109 ரன் மட்டுமே  எடுத்தது. நிதிஷ் ராணா 37 ரன் (29 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), லலித் யாதவ் 33, மனோஜ் கல்ரா 13, உன்முக்த் சந்த் 12 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர் (3 பேர் டக் அவுட்). கர்நாடகா பந்துவீச்சில் வி.கவுஷிக் 4, கரியப்பா 3, வினய் குமார் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய கர்நாடகா 15.3 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 112 ரன் எடுத்து எளிதாக வென்றது. ரோகன் கடம் 0, பி.ஷரத் 26  ரன்னில் வெளியேறினர். மயாங்க் அகர்வால் 43 ரன் (47 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), கருண் நாயர் 42 ரன்னுடன் (23 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கர்நாடகா 4 புள்ளிகளை தட்டிச் சென்றது. பி பிரிவில்  அந்த அணி தொடர்ச்சியாக 3வது வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

இதே மைதானத்தில் நடந்த மற்றொரு பி பிரிவு லீக் ஆட்டத்தில், விதர்பா அணி 10 ரன் வித்தியாசத்தில் உத்தரப்பிரதேச அணியை வென்றது. விதர்பா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன் (டெய்டே 41, வஸ்தவா  23, ஜிதேஷ் ஷர்மா 22, ஜாங்கிட் 19*); உத்தரப்பிரதேசம் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன் (உபேந்திரா யாதவ் 26, சமர்த் சிங் 39, கேப்டன் அக்‌ஷதீப் நாத் 17, அங்கித் சவுதாரி 16). இந்தூர், ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடந்த ஏ பிரிவு சூப்பர் லீக் ஆட்டத்தில், பெங்கால் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தியது. ஜார்க்கண்ட் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன் (அனுகுல் ராய்  37*, விராத் சிங் 27, ஜக்கி 24); பெங்கால் 13 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 127 ரன் (கோஸ்வாமி 86*, சாஹா 24).

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: