அயோத்தி நிலப் பிரச்னையை மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காண உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முழு விவரம்!!

டெல்லி : அயோத்தி நிலப் பிரச்னையை நீதிமன்றம் நியமிக்கும் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில் பிரச்சனைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் தொடர்பாக தீர்வு காண மத்தியஸ்தர்களை நியமித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அயோத்தி பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தையை 8 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

 உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில்  1992ம் ஆண்டு பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இந்த பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்சனை எழுந்தது. இது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பும் சரிசமமாக பங்கிட்டுக் கொள்ளுமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேல்முறையீட்டு வழக்கு

இந்த உத்தரவை எதிர்த்து சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினர் உள்பட பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் 14 மனுக்கள் தாக்கல் செய்தனர். மேலும் இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே அயோத்தி நிலம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இம்மனுக்கள் மீதான விசாரணை கடந்த ஜனவரி 8ம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முழு விவரம்

இந்நிலையில் அயோத்தி பிரச்சினையில் மத்தியஸ்தர்களை நியமித்து இணக்கமான தீர்வு காண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்பின் முழு விவரம் பின்வருமாறு :

*மத்தியஸ்தர்கள் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி இம்ராஹிம் கலிஃபுல்லாவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

*ஓய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் 3 நபர்கள் கொண்ட மத்தியஸ்தர் குழு அமைக்கப்படுவதாக   உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

*வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கரும் சமரசக்குழுவில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அயோத்தி சமரசக்குழுவுவில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு இடம்பெறுவார். அயோத்தி சமரசக்குழுவில் இடம்பெற்றுள்ள மூவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

*உச்சநீதிமன்ற நீதிபதி இம்ராஹிம் கலிஃபுல்லா காரைக்குடியைச் சேர்ந்தவர். ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு சொந்த ஊர் கும்பகோணம் அடுத்த பாபநாசம் ஆகும். 3வது உறுப்பினரான வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சும் சென்னையை சேர்ந்தவர்.  

*மத்தியஸ்தர் குழு செயல்பாடுகளை ரகசியமாக வைத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

*மத்தியஸ்தர் குழு ஒரு வாரத்தில் சமரசக் குழு தனது பணியை தொடங்க அறிவுரை வழங்கியுள்ளது.

*முதல் நிலை அறிக்கையை சமரசக்குழு 4வாரத்தில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

*மத்தியஸ்தர் குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை 8 வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.   

*அயோத்தி சமரசத்தீர்வு குழு பைசாபாத் நகரில் இருந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

*சமரச பேச்சுவார்த்தைக் குழுவிற்கு தேவையான உதவிகளை உத்தரப் பிரதேச அரசு செய்து தர ஆணையிடப்பட்டுள்ளது.

*பைசாபாத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை விவரங்களை ஊடகங்களில் வெளியிட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

*சமரச பேச்சுவார்த்தையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

*3 பேர் அடங்கிய குழு தங்களுக்கு தேவைப்பட்டால் கூடுதலாக உறுப்பினர்களை நியமித்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: