கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவினர் டிஜிட்டல் பண பரிவர்த்தனை? திமுக சட்டத்துறை செயலர் தேர்தல் அதிகாரியிடம் புகார்

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில் அக்கட்சியின் சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி, கொளத்தூர் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: அதிமுகவைச் சேர்ந்த சிலர் கடந்த 31ம் தேதி இரவு கொளத்தூர், தீட்டி தோட்டம், கே.சி.கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டையின் நகலை பொதுமக்களிடம் இருந்து சேகரித்துக்கொண்டிருந்தனர்.திமுகவைச் சேர்ந்த சிலர், அந்த வழியாக சென்றபோது அவர்களை பார்த்து அதிமுகவினர் அங்கிருந்து தப்பியோடினர். இதுகுறித்து விசாரித்த போது அதிமுகவினர் வாக்காளர் அட்டை நகலோடு, மொபைல் போன் எண்ணையும் சேகரித்ததும் தெரியவந்தது. மேலும், அதிமுகவினர் மொபைல் போன் பணப்பரிவர்த்தனை செயலிகள் வாயிலாக பொதுமக்களுக்கு ஓட்டுக்கு பணம் அளிக்க இருப்பதும் தெரியவந்திருக்கிறது. தொகுதிக்கு வெளியே வாக்காளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கும் அதிமுக முயற்சி செய்து வருகிறது. தேர்தல் பறக்கும் படை உடனடியாக இதை தடுக்காவிட்டால் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் நேர்மையான தேர்தல் நடக்காது. இதனால் சம்பந்தப்பட்ட தேர்தல் உயர் அதிகாரிகள் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகளில் பண பரிவர்த்தனையை தடுக்க தேர்தல் அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது….

The post கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவினர் டிஜிட்டல் பண பரிவர்த்தனை? திமுக சட்டத்துறை செயலர் தேர்தல் அதிகாரியிடம் புகார் appeared first on Dinakaran.

Related Stories: