40 நாடாளுமன்ற தொகுதி, 21 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்ப மனு வினியோகம்

சென்னை: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதி, இடைத்தேர்தல் நடைபெற உள்ள 21 சட்டப் பேரவை தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து வருகிற 25ம் தேதி (நாளை) முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.வருகிற மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்பார்வையில் தோழமைக் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது.பேச்சுவார்த்தை முடிந்து காங்கிரசுக்கு 10 தொகுதிகளும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக, கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. அடுத்த வாரம் பேச்சுவார்த்தை முடிந்து இடங்கள், தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து  விருப்ப மனுக்களை பெற திமுக முடிவு செய்துள்ளது. விருப்ப மனுக்கள் பெறப்பட்டதும் நேர்காணல் நடத்தி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.விருப்ப மனுக்கள் குறித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வருகிற 25-2-2019 முதல் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும்.போட்டியிட விரும்புகிற திமுகவினர் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, 1-3-2019 முதல் 7-3-2019 மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில்சேர்ப்பித்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ₹25,000. விண்ணப்ப படிவத்தை தலைமைக் கழகத்தில் 1000 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் விண்ணப்பம் செய்தோருக்கு, அவர்கள் செலுத்திய விண்ணப்பக் கட்டணம் தலைமைக் கழகத்தால் திருப்பி வழங்கப்படும்.

21 சட்டப் பேரவை தொகுதிகள்

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில், போட்டியிட விரும்புகிறவர்கள் அதற்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, 1-3-2019 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 7-3-2019 (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்குள், அண்ணா அறிவாலயத்திலுள்ள திமுக அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ₹25,000. விண்ணப்ப படிவத்தை தலைமைக் கழகத்தில் 1000 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் விண்ணப்பம் செய்தோருக்கு, அவர்கள் செலுத்திய விண்ணப்பக் கட்டணம் தலைமைக் கழகத்தால் திருப்பி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: