ஆம்பூர் அருகே கட்டி 2 ஆண்டுகளான நிலையில் அரசுப்பள்ளி கட்டிடத்தை கிராம மக்களே திறந்தனர்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே கட்டி முடித்து 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை நேற்று கிராம மக்களே திறந்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூரில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு புதிய கூடுதல் கட்டிடம் கட்டி தர அப்பகுதியினர் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், போதிய நிலம் இல்லாததால் புதிய கட்டிடம் கட்ட இயலாது என்று அப்போதைய கல்வி துறை அதிகாரி ஒருவர் மறுப்பு தெரிவித்தாராம்.இதைத்தொடர்ந்து ஆம்பூரை சேர்ந்த லிக்மிசந்த் என்பவர் தனது நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கினார். இதையடுத்து தமிழக பள்ளி கல்வித்துறை சார்பாக அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்ட ₹1.70 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  12 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவடைந்தது. ஆனால், அப்பகுதியினர் பலமுறை கோரிக்கை விடுத்தும் கல்வி துறை அதிகாரிகள் இந்த புதிய கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில் நேற்றுமுன்தினம் கிராம மக்கள் ஒன்று கூடி புதிய கட்டிடத்தை திறக்க முடிவு செய்தனர். தொடர்ந்து நேற்று காலை கிராம மக்கள், பந்தல் மற்றும் தோரணம் கட்டி திறப்பு விழா ஏற்பாடுகளை செய்தனர். பின்னர் ரிப்பன் வெட்டி பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தனர். கட்டி முடித்து இரண்டு ஆண்டுகளாகியும் திறக்காத பள்ளி கட்டிடத்தை அப்பகுதியினரே ஒன்று திரண்டு திறந்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: