மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் தேவர் பெயர் வைக்கக்கோரி கடையடைப்பு, ரயில் மறியல்: பஸ் கண்ணாடி உடைப்பு; 800 பேர் கைது

மதுரை: மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்டக் கோரி, நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. ரயில், பஸ் மறியலில் ஈடுபட்ட 800க்கும் மேற்பட்டோர் கைதாயினர். மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்ட வேண்டும். டிஎன்டி ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு தேவர் அமைப்புகள் சார்பிலும் மதுரை மாநகரில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி மதுரையில் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்திற்கு ஆதரவாக நகரில் 95 சதவீத கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. காலை 6.30 மணியளவில் மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை தேவர் அமைப்பினர் மறித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்துமறியல் போராட்டத்தில் ஈடுபட வந்த மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் தர் வாண்டையாரை பாண்டிகோவில் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி, தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க கூட அனுமதி மறுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உட்பட 100 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்து பின்னர் விடுவித்தனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்பட 800 பேர் கைதாயினர். போராட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் எம்எல்ஏ கருணாஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில தலைவர் கதிரவன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் தர் வாண்டையார் உள்ளிட்ட பல அமைப்பின் தலைவர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை பீடத்தின் மீதேறி, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். காலை 10 மணிக்கு துவங்கிய போராட்டம் மாலை 6 மணி வரை நீடித்தது. அவர்களை கலெக்டர் நடராஜன் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். யாரும் வராததால் கோரிப்பாளையம் வழியாக செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் மாற்று வழியில் அனுப்பப்பட்டன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர். 

பஸ்களின் கண்ணாடி உடைப்பு: 2 பஸ்கள் மீது கல்வீசப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.  இதுதொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பஸ், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கினாலும், கடையடைப்பு, போக்குவரத்து மாற்றத்தால் மதுரையில் நேற்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: