ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தமிழக அரசாணை தொடருமா? உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. ஆலை மீண்டும் திறக்கப்படுமா? அல்லது தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை தொடருமா? என்பது இந்த தீர்ப்பில் தெரியவரும். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. அப்போது, ‘ஆலையால் சுகாதார சீர்கேடு, மக்கள் உடல் நலம் ஆகியவை பாதித்துள்ளது என்பதற்கான எந்த ஆதாரமோ, அறிக்கையோ அல்லது நோட்டீசோ மாநில அரசு ஏன் எங்களிடம் வழங்கவில்லை’ என வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.

இதேப்போல் தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், விஸ்வநாதன் மற்றும் குருகிருஷ்ணகுமார் ஆகியோர் வாதத்தில்,”ஆலையால் பாதிப்பு இல்லை என்றால் நிலத்தடி நீர், குடிநீர், சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவை நிகழ்ந்தது எப்படி? வேதாந்தா நிர்வாகத்தால் பதிலளிக்கவோ அல்லது அதனை நிரூபிக்கவோ முடியுமா? என வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக சவாலான வாதங்களை முன்வைத்தனர்.

வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து விட்டது என்றும், மேலும் வேறு ஏதேனும் தகவல் தெரிவிக்க விரும்பும் பட்சத்தில் அனைத்து தரப்பும் பிப்ரவரி 11ம் தேதிக்குள் தங்களின் எழுத்துப்பூர்வ வாதங்களை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் எனக்கூறி நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 7ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து தமிழகம் மற்றும் வேதாந்தா நிறுவனம் ஆகிய இரு தரப்பிலும் கடந்த வாரம் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் நேற்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பிப்ரவரி 18ம் தேதி அதாவது நாளை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ரோகிங்க்டன் பாலி நாரிமன் மற்றும் வினீத் சரண் ஆகியோர் தீர்ப்பு வழங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: