மயக்க ஊசியிடம் இருந்து மும்முறை தப்பித்த நிலையில், திருப்பூர் அருகே வனத்துறையிடம் சின்னத்தம்பி யானை பிடிப்பட்டது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புதூரில் முகாமிட்டிருந்த சின்னதம்பி யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதையடுத்து சின்னதம்பியை கும்கிகள் உதவியுடன் லாரியில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது.

யார் அந்த சின்னத்தம்பி யானை ??

கோவை தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி காட்டுயானையை வனத்துறையினர் கடந்த 25-ம் தேதி மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். பிடிபட்ட யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு வனப்பகுதியில் விட்டனர். ஆனால் சின்னத்தம்பி யானை மீண்டும் தான் இருந்த பகுதிக்கே திரும்பியது. இதையடுத்து, அந்த யானையை கும்கியாக மாற்ற முயற்சிப்பதாக தகவல்கள் பரவின. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக அருண் பிரசன்னா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அமர்வு, சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றக்கூடாது எனவும், மேலும் அதனை துன்புறுத்தாமல் பத்திரமாக காட்டுக்குள் அனுப்பிவைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இதையடுத்து சின்னத்தம்பி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்ப வனத்துறையினர் முயன்றனர். இந்த நிலையில், விலங்குநல ஆர்வலர் முரளிதரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் சின்னத்தம்பி யானையால் அங்குள்ள பயிர்கள் சேதமடைந்து வருவதால், யானையை முகாமுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சின்னதம்பி யானை நடமாட்டம் குறித்து அறிக்கை தர தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

யானையை முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை

இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது, உயர்நீதிமன்றத்தில் வனத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தலைமை வனப்பாதுகாவலர் கூறியுள்ளதாவது, சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை, சின்னத்தம்பி யானையை மிகவும் சாதுவாக மாறிவிட்டதால் மீண்டும் அதனை காட்டுக்குள் திருப்பி அனுப்புவதில் சிரமம் உள்ளது, காட்டிற்குள் அனுப்ப முயற்சித்தும் யானை  மீண்டும் ஊருக்குள் நுழைந்து விடுகிறது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சின்னத்தம்பி யானையை பிடிக்க உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது சின்னத்தம்பி யானையினை பிடித்து கட்டுப்பாட்டில் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் , நீதிபதிகள் சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பது தான் நல்லது என்று வனத்துறையும், யானைகள் நிபுணர் அறிக்கையும்  கூறுகிறது.  அதனால், சின்னதம்பியை பிடிக்க தகுந்த உத்தரவை தலைமை வனப்பாதுகாவலர் பிறப்பிக்க வேண்டும். யானையை முகாமில் அடைத்து பயிற்சி வழங்குவதா? அல்லது வனப்பகுதிக்குள் மீண்டும் கொண்டு செல்வதா? என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்  என உத்தரவிட்டனர்.

3 கும்கி யானைகளை வரவழைப்பு

உடுமலை அருகே கண்ணாடிபுதூர் பகுதியில் சின்னதம்பி யானை உலா வந்தது. சின்னதம்பி யானையை பிடிக்க கும்கி  யானைகளை  கொண்டு வனத்துறையினர் முயன்றனர். சின்னத்தம்பியை பிடிக்க ஏற்கனவே இரண்டு கும்கிகள் உள்ள நிலையில் மேலும் ஒரு கும்கி யானை வரவழைக்கப்பட்டது. இதனிடையே கண்ணாடிபுதூர் பகுதியில் உலா வந்த சின்னதம்பி யானை அங்குள்ள கரும்பு தோட்டத்திற்குள் சென்றது. அந்த இடம் சேறும் சகதியுமான, லாரி செல்ல முடியாத இடமாக இருந்ததால் சின்னத்தம்பி  வேறு இடத்துக்கு மாறியதும் அதற்கு மயக்கம் ஊசி செலுத்தி லாரியில் ஏற்றி செல்ல வனத்துறையினர் திட்டமிட்டனர்.

 யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் பணி தீவிரம்

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கண்ணாடிப்புத்தூர் எனும் கிராமத்தில் சுற்றி வரும், சின்னத்தம்பி யானையினைப் பிடித்து வரகளியாறு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் நேற்றுத் தொடங்கியது. சின்னத்தம்பி தற்போது தங்கியுள்ள பகுதி மேடும், பள்ளமுமாக இருந்ததால் மண்சாலை அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இன்று அதிகாலையில் இருந்து மயக்க ஊசி செலுத்தி யானையினை பிடிக்கும் பணியில் கால்நடை மருத்துவர் அசோகன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மும்முறை ஊசியில் இருந்து தப்பித்த சின்னத்தம்பி யானை

சின்னத்தம்பி கரும்புத் தோட்டத்தின் நடுவே இருப்பதால், யானைகளைக் கொண்டு தோட்டத்தில் இருந்து வெளியே துரத்தி , மயக்க ஊசியினை செலுத்தினர். முதலில் செலுத்திய ஊசி யானையின் காலில் பட்டு தெரித்தது, ஊசி முழுமையாக உடலில் ஏறாதது உள்ளிட்ட காரணங்களால் முதல் மூன்று முயற்சிகள் தோல்வியடைந்தன. அச்சமயம்  யானை மீண்டும் மற்றோரு கரும்புத் தோட்டத்தினுள்ளே சென்றது.

பிடிப்பட்டது சின்னதம்பி யானை

சின்னத்தம்பி யானை  மனிதர்களைப் பார்த்தவுடன் தோட்டத்தினுள் ஓட ஆரம்பித்து விடுவதால், நான்காவது முறையாக செலுத்திய ஊசிதான் யானையின் உடம்பில் தைத்தது. சின்னத்தம்பியை யானையை கும்கி யானைகளை வைத்து வெளியேற்றியபின், கரும்புக் காட்டுக்கு வெளியே சில  பழங்களை வனத்துறையினர் போட்டனர். அப்போது வேறு எதையும் கவனிக்காமல் சின்னத்தம்பி பலா பழங்களை உண்டு கொண்டிருந்தபோது வனத்துறையினர்  பிடித்தனர். இதையடுத்து சுயம்பு மற்றும் கலீம் ஆகிய கும்கி யானைகள் உதவியுடன் சின்னத்தம்பி யானையை லாரியில் ஏற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: