நெருங்கி வரும் மக்களவை தேர்தல் 3 ரயில்வே திட்டங்களை துவங்கி வைக்கிறார் பிரதமர் மோடி: பிப்.27ல் ராமேஸ்வரம்-தனுஷ்கோடி ரயில் பாதைக்கு அடிக்கல்

புதுடெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஒரே வாரத்தில் 3 ரயில்வே திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார். பாஜ தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு இந்தியாவில் தயாரிப்போம் என அழைக்கப்படும் மேக் இன் இந்தியா திட்டத்தை தொடங்கியது. இதன்  மூலம் நாட்டின் தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சி அதிகரிப்பதோடு, உலக அளவில் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியா மாறும் என்றும் அரசு நம்பிக்கை  தெரிவித்தது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசின் திட்டங்களை வெளிக்கொணரவும், தனது அரசின் சாதனைகளை குறிப்பிடும் வகையிலும் பல்வேறு  நடவடிக்கைகளை பாஜ தலைமையிலான பிரதமர் மோடி அரசு மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் வருகிற வாரத்தில் 3 ரயில்வே திட்டங்களை பிரதமர்  தொடங்கி வைக்கிறார். முதலில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இன்ஜின் இல்லாத ரயில் சேவையாகும்.  

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்பெட்டி தொழிற்சாலையில் முதல் முறையாக இன்ஜின் இல்லாத ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. 16 பெட்டிகள் கொண்ட இந்த  ரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் பெட்டிகளுடன் இணைக்கப்பட்டதாக  இருக்கும். “ரயில் 18” என்ற இந்த ரயிலின் பெயரை சமீபத்தில் “வந்தே பாரத்  எக்ஸ்பிரஸ்” என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பெயர் சூட்டினார். டெல்லி மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இதன் சோதனை ஓட்டம்  வெற்றிகரமாக நடந்தது. அப்போது மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் ரயில் இயங்கியது. இதன் மூலம் இந்தியாவின் அதிவேக ரயில் என்ற பெயரை பெற்றது. இந்த  ரயிலை வரும் 15ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். டெல்லி-வாரணாசி இடையே இந்த ரயில் இயக்கப்படும். 30  ஆண்டுகளாக இயங்கும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாற்றாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அமையும்.

இரண்டாவதாக, வருகிற 19ம் டீசல் இன்ஜின், மின்சார இன்ஜினாக மாற்றப்பட்ட ரயிலின் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். உள்நாட்டு  தொழில்நுட்பத்தில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் டீசல் இன்ஜின், ரயில் மின்சார ஆற்றலில் இயங்கும் ரயிலாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மின்சார  ஆற்றலுக்கு மாற்றப்பட்ட பின்னர் 2600 எச்பி சக்தியானது 5000 எச்பி சக்தியாக அதிகரித்துள்ளது. 2017ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டம்  2018ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி நிறைவடைந்தது. இந்த ரயில் சேவையை வாரணாசியில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என  எதிர்பார்க்கப்படுகின்றது. மூன்றாவதாக வரும் 27ம் தேதி ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியை இணைக்கும் அகல ரயில் பாதை திட்டத்திற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.  ரூ.208 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: