திருப்பதி லட்டுக்கு பெற்றிருப்பதைப்போல பழநி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு பெற இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?: அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கேள்வி

மதுரை:  பழநி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. பழநி நகராட்சியின் மக்கள் தொகையும் அதிகரித்துள்ளது. ஆனால் இதற்கேற்பவும், பக்தர்கள் வருகைக்கு ஏற்பவும் போதுமான அடிப்படை  வசதிகள் செய்யப்படவில்லை. கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. பக்தர்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை. எனவே, கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்பை அகற்றவும், பக்தர்களுக்கு  தேவையான அடிப்படை வசதிகளை செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, பிரபலமான திருப்பதி லட்டிற்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இதைப்போல பழநி பஞ்சாமிர்தமும் உலக பிரசித்தி  பெற்றது. தமிழர்களின் பாரம்பரிய பொருட்களில் இதுவும் ஒன்று. எனவே, பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு ஏன் இதுவரை பெறவில்லை? இதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார்  குறியீடு பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலுக்கு சொந்தமான நிலங்களின் மீதுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும், அறநிலையத்துறை  அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை பிப்.26க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: