வெலிங்டன்: நியூசிலாந்து அணியுடன் நடந்த 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 35 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். கலீல் அகமது, குல்தீப் யாதவ், தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக முகமது ஷமி, டோனி, விஜய் ஷங்கர் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் கப்திலுக்கு பதிலாக கோலின் மன்றோ இடம் பெற்றார்.அதிர்ச்சி தொடக்கம்: இந்திய அணி தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித், தவான் களமிறங்கினர். போல்ட் - ஹென்றி வேகக் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரோகித் 2, தவான் 6, ஷுப்மான் கில் 7, எம்.எஸ்.டோனி 1 ரன்னில் அணிவகுப்பு நடத்த, இந்தியா 9.3 ஓவரில் 18 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து விழிபிதுங்கியது. ஹாமில்டன் போட்டி போலவே 100 ரன்னுக்கும் குறைவாக சுருட்டிவிடலாம் என நியூசி. அணியினர் தாக்குதலை தீவிரப்படுத்தினர்.ராயுடு - ஷங்கர் போராட்டம்: இந்த நிலையில், 5வது விக்கெட்டுக்கு அம்பாதி ராயுடு - விஜய் ஷங்கர் ஜோடி கடுமையாகப் போராடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் இணைந்து 98 ரன் சேர்த்தனர். பொறுப்புடன் விளையாடிய ஷங்கர் 45 ரன் (64 பந்து, 4 பவுண்டரி) எடுத்து துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். அடுத்து ராயுடு - கேதார் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராயுடு 90 ரன் (113 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார்.ஹர்திக் அதிரடி: கேதார் ஜாதவ் 34 ரன் (45 பந்து, 3 பவுண்டரி) எடுத்து ஹென்றி பந்துவீச்சில் கிளீன் போல்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியில் இறங்கிய ஹர்திக் பாண்டியா சிக்சர்களாக விளாசித் தள்ள இந்திய ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. நியூசி. பந்துவீச்சை சிதறடித்த அவர் 45 ரன் (22 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி நீஷம் பந்துவீச்சில் போல்ட் வசம் பிடிபட்டார். புவனேஷ்வர் 6, ஷமி 1 ரன்னில் வெளியேற, இந்தியா 49.5 ஓவரில் 252 ரன் குவித்து ஆல் அவுட்டானது. சாஹல் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசி. பந்துவீச்சில் ஹென்றி 4, போல்ட் 3, நீஷம் 1 விக்கெட் வீழ்த்தினர். 200 ரன்னுக்கும் குறைவான இலக்கை துரத்தலாம் என நினைத்திருந்த நியூசிலாந்து, ஹர்திக் பாண்டியாவின் எதிர்பாராத அதிரடியால் 50 ஓவரில் 253 ரன் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கியது. மன்றோ, நிகோல்ஸ் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். நிகோல்ஸ் 8 ரன் எடுத்து ஷமி வேகத்தில் கேதார் வசம் பிடிபட்டார்.