ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் : 5 ரயில்கள் தாமதமாக இயக்கம்

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே நேற்று காலை தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் 5 ரயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டது.வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து சேலம் மார்க்கம் செல்லும் வழியில் திருப்பத்தூர்-காக்கங்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று அதிகாலை ரயில்வே ஊழியர்கள் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, காலை 6.30 மணியளவில் மொளகரம்பட்டி பகுதியில் ஓரிடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை ஊழியர்கள் கண்டனர். உடனடியாக ஜோலார்பேட்டை ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் அவ்வழியாக வந்த ரயில்களுக்கு தகவல் தெரிவித்து ஆங்காங்கே நிறுத்தினர். அதன்படி சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை சென்ற சேலம் ரயில், ஐதராபாத்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், டாடா நகர்- ஆலப்புழா வாராந்திர எக்ஸ்பிரஸ், தன்பாத் எக்ஸ்பிரஸ், கொல்கத்தா-ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ஆகிய 5 ரயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டன.  சம்பவ இடத்திற்கு ரயில்வே விபத்து தடுப்பு மீட்பு குழுவினர் சென்று, தண்டவாள விரிசலை தற்காலிகமாக சீரமைத்தனர். இதையடுத்து சுமார் அரை மணி நேரம் காலதாமதமாக ஒவ்வொரு ரயிலாக இயக்கப்பட்டது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், அதிக பனிப்பொழிவு காரணமாக தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. தற்காலிகமாக சீரமைத்த பின்னர் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகிறது என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: