கோவிலில் இருந்து வீட்டுக்கு அம்மனை அழைத்து சென்றதாக கூறி குடும்பத்தையே ஒதுக்கிட்டாங்க...தர்மபுரி கலெக்டரிடம் பூசாரி மனு

தர்மபுரி: தீர்த்தத்துடன் மாரியம்மனை வீட்டுக்கு அழைத்து சென்றதாக கூறி குடும்பத்தையே முக்கிய பிரமுகர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வச்சிட்டாங்க... என்று தர்மபுரி கலெக்டரிடம் பூசாரி ஒருவர் மனு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே, காட்டம்பட்டியை சேர்ந்தவர் பெரியதம்பி (60). விவசாயியான இவர் அந்த ஊரில் உள்ள மாரியம்மன் கோயில் பூசாரியாகவும் இருந்தார். இவர் தனது மனைவி அம்சா மகன், மகள் ஆகியோருடன் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் மலர்விழியிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: நாங்கள் குடும்பத்துடன் காட்டம்பட்டியில் வசிக்கிறோம். கடந்த நவம்பர் மாதம் 19ம் தேதி எங்களது ஊரில், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சாமிக்கு பூஜைகள் முடிந்த பின்னர் அங்கிருந்த தீர்த்தத்தை எனது வீட்டில் தெளிப்பதற்காக எடுத்து சென்றேன்.

இதையடுத்து நவம்பர்  22ல் எங்கள் ஊர் முக்கிய பிரமுகர்கள் கோயில் அருகே வருமாறு மைக் மூலம் எங்களை அழைத்தனர். அங்கு 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியிருந்தனர். அப்போது ஊர் பிரமுகர்கள், கோயிலில் இருந்து தீர்த்தத்தை எடுத்துச்செல்லும் போது கோயிலில் உள்ள மாரியம்மனையும் அழைத்துச் சென்றுவிட்டதாக கூறி எங்களுக்கு 70 ஆயிரம் அபராதமும், அதே ஊரை சேர்ந்த வேடியப்பன் என்பவருக்கு ₹25 ஆயிரம் அபராதமும் விதித்தனர். அபராத பணத்தை நாங்கள் கட்டாவிட்டால் ஊரைவிட்டு விலக்கி வைப்பதாக மிரட்டல் விடுத்தனர். இதனால் உடனடியாக அபராத தொகையை செலுத்திவிட்டோம். இது தொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசில் நாங்கள் புகார் செய்தோம். போலீசாரின் சமரசத்தின் பேரில் நாங்கள் செலுத்திய அபராத தொகையை ஊர் பிரமுகர்கள் திருப்பி தந்துவிட்டனர்.

 அதன்பின்னர் கடந்த 25ம் தேதி எங்கள் ஊரில் இறந்தவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றபோது எங்களை கலந்து கொள்ளக்கூடாது என ஊர்பிரமுகர்கள் மிரட்டி திருப்பி அனுப்பினர். மேலும் எங்களிடம் வழக்கமாக பால் கொள்முதல் செய்பவரை ஊர் பிரமுகர்கள் மிரட்டியதால் அவர் எங்களிடம் பால் கொள்முதல் செய்யவில்லை. ஊருக்குள் நடக்கும் எந்த சுப காரிய நிகழ்ச்சிகளிலும் எங்கள் குடும்பத்தினர் கலந்துகொள்ள ஊர்பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வச்சிட்டாங்க. இதனால் எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. எங்களது சொந்த ஊரில் நாங்கள் வாழ்வதற்கே வழியில்லாமல் அவதிப்படுகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு எங்களை அதே ஊரில் வாழ வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: