கூவம் ஆற்றில் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம்: கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கொன்றது அம்பலம்

* பல கி.மீ பைக்கில் கொண்டு வந்து சடலம் புதைப்பு

* மது போதையில் உளறியதால் சிக்கினார்

* காதலன் உள்பட 4 பேர் பிடிபட்டனர்

ஆவடி: ஆவடி அருகே கூவம் ஆற்றில் வாலிபர் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை கொன்று சடலத்தை பல கி.மீ பைக்கில் கொண்டு வந்து புதைத்த மனைவி,  அவரின் காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.ஆவடி அடுத்த திருநின்றவூர், ராஜாங்குப்பம் பகுதியில் உள்ள கூவம் ஆற்றங் கரையில் கடந்த 14ம் தேதி ஒரு வாலிபர் சடலம் அரைகுறையாக மண்ணில்  புதைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருநின்றவூர் இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரணை நடத்தினார். இறந்தவருக்கு சுமார் 40 வயதிருக்கும், உடல் அழுகி இருந்ததால் அவரை உடனடியாக அடையாளம்  காண முடியவில்லை. இதனையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இறந்தவர் கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம், வள்ளலார் நகர், 13வது தெருவை சேர்ந்த குமார் (42) என்பது தெரியவந்தது. இவர், ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி  வந்துள்ளார். இவரது மனைவி செல்வி (32). இவர்களுக்கு குப்பன் (12), அருள்முருகன் (4) ஆகிய மகன்களும், ஐஸ்வர்யா (9) என்ற மகளும் உள்ளனர்.குமாரின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம். அதே பகுதி பாசார்  கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (20). இவர் திருநின்றவூர் அருகே ராஜாகுப்பம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார். இவர் செல்வியின் தூரத்து உறவினர். இவர், அடிக்கடி விடுமுறை நாட்களில்  விழுப்புரத்தில் உள்ள சொந்த ஊருக்கு சென்று வந்துள்ளார். அப்போது, அங்கு மணிகண்டனுக்கும், குமார் மனைவி செல்விக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

 இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து குமாருக்கு தெரியவந்ததால், அவர் இருவரையும் அழைத்து கள்ளத்தொடர்பை துண்டிக்குமாறு கண்டித்துள்ளார். இருந்தபோதிலும்,  அவர்கள் இருவரும் தொடந்து சந்தித்து வந்துள்ளனர். இதனையடுத்து, கடந்த 2 மாதத்திற்கு முன்பு குமார் சொந்த ஊரை காலி செய்துவிட்டு, மாடம்பாக்கம் வந்து குடும்பத்தோடு குடியேறினார். இதன்பிறகு செல்வியும்,  மணிகண்டனும் சந்திக்க முடியவில்லை. இவர்களது உல்லாசத்திற்கு குமார் இடையூறாக இருந்து உள்ளார். ஆனால், இருவரும் செல்போன் மூலம் தொடர்பில் இருந்துள்ளனர். அப்போது, அவர்கள் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக  இருக்கும் குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டினர். இதனையடுத்து கடந்த 10ம் தேதி இரவு செல்வி, குமாருக்கு பாலில் தூக்க மாத்திரையை  கலந்து கொடுத்து தூங்க வைத்துள்ளார். பின்னர், மணிகண்டனுக்கு செல்போனில்  தகவல் கொடுத்து வரவழைத்து உள்ளார்.

 இதனையடுத்து, மணிகண்டன், தன்னுடன் செங்கல் சூளையில் வேலை பார்க்கும் நண்பர்களான விழுப்புரத்தைச் சேர்ந்த அய்யனார் (27), பூமிநாதன் (20) ஆகியோரை அழைத்துக் கொண்டு பைக்கில் மாடம்பாக்கத்திற்கு வந்துள்ளார். நண்பர்கள் இருவரும் வெளியில் காத்திருக்க, மணிகண்டன் குமார் வீட்டுக்குள் சென்று குமார் முகத்தில் தலையணையை வைத்து செல்வி அமுக்கி உள்ளார். மேலும், மணிகண்டன் நைலான் கயிற்றால் குமார் கழுத்தை நெரித்து  கொலை செய்துள்ளார். அதன் பிறகு மணிடகண்டன் தனது நண்பர்களுடன், குமாரின் சடலத்தை பைக்கில் திருநின்றவூர் கொண்டு சென்று ராஜாங்குப்பம் கூவம் ஆற்றின் கரையோரத்தில் அரைகுறையாக தோண்டி முருகன்  சடலத்தை புதைத்துவிட்டு சென்றனர். பின்னர், மணிகண்டனும் நண்பர்களும், பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்று விட்டு திருநின்றவூருக்கு கடந்த 23ம் தேதி வந்துள்ளனர். பின்னர், மணிகண்டன், தனது  கள்ளக்காதலி செல்வியும், 3 குழந்தைகளையும் உடன் அழைத்து வந்து செங்கல் சூளையில் தங்க வைத்து உள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் செங்கல் சூளையில் தங்கி இருந்த கொட்டகையில் சம்பவத்தை பற்றி குடிபோதையில் உளறி உள்ளான். இதனை கவனித்த பெண் ஊழியர் இருவர் செங்கல் சூளை  உரிமையாளர் சுரேசிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து, அவர் திருநின்றவூர் காவல் நிலையத்திற்கு நேற்று காலை தகவல் கொடுத்தார். பின்னர், போலீசார் விரைந்து வந்து செல்வி, மணிகண்டன், அய்யனார், பூமிநாதன் ஆகிய  நான்கு பேர்களை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் அனைவரும் குமாரை கொன்று புதைத்தை ஒப்புக்கொண்டனர். இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர்,  போலீசார் கொலை வழக்காக மாற்றி 4 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: