மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்களை அரசு அழைத்துப் பேச அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் பிற பணியாளர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை தமிழக அரசு அழைத்து பேச வேண்டும். என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் உள்ளடக்கிய கல்வித்திட்டத்தில் பணியாற்றி வரும் சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் பிற பணியாளர்கள் பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துவதற்கு கூட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முன்வராதது வருத்தமளிக்கிறது. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சேவை செய்வது எளிதான விஷயமல்ல. கூடுதல் கவனமும், சகிப்புத் தன்மையும் அவசியமாகும். இவர்களின் சேவையால் ஆண்டு தோறும் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகள் சிறப்பான முறையில் கல்வி பெறுகின்றனர்.

 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை கேட்பதற்கு பதிலாக போராட்டத்தை கலைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு ஒருங்கிணைந்த  பள்ளிக்கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் பிற பணியாளர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை தமிழக அரசு அழைத்துப் பேச வேண்டும். பணி நிலைப்பு, சமூகப் பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்படி வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: