பாஜ கூட்டணிக்கு எதிராக போர்க்கொடி தம்பிதுரை விவகாரம் குறித்து இபிஎஸ், ஓபிஎஸ் அவசர ஆலோசனை

சென்னை: பாஜ கூட்டணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள தம்பிதுரை விவகாரம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினர். விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் முழு கட்டுப்பாடும் பிரதமர் மோடி மற்றும் பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவிடம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதை நிரூபிப்பதுபோல, தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதை நேரடியாக கண்டிக்காமல், மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக காவிரி விவகாரம், மீத்தேன் திட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்னை, சென்னை முதல் சேலம் வரையிலான 8 வழிச்சாலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் மத்திய அரசுக்கு ஆதரவாகவே தமிழக அரசு நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தநிலையில், அதிமுகவும் பாஜவும் கூட்டணி சேரும் என்று கூறப்பட்டு வந்தது. இதை அதிமுக தலைவர்கள் மறுக்கவில்லை. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி முடிவு செய்யப்படும் என்று கூறி வந்தனர். பாஜவுக்கு எதிராக எல்லா கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக மட்டும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், அதிமுக மூத்த தலைவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை கடந்த சில நாட்களாக பாஜவுக்கு எதிராக பேட்டி அளித்து வருகிறார். பாஜவை நாங்கள் தோளில் தூக்கி சுமக்க முடியாது. தமிழகத்தில் தாமரை மலராது என்று நேரடியாக தாக்குதல் நடத்தி வருகிறார். உச்சக்கட்டமாக, நாடாளுமன்றத்தில் ரபேல் ஓப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து பேசியதோடு, பாஜ அரசுக்கு சிக்கல் ஏற்படும் வகையில் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டார். அவரது கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்களால் தெளிவான பதில் அளிக்க முடியவில்லை. அவரது பேச்சை, காங்கிரஸ் தலைவர் ராகுல் கை தட்டி பாராட்டினார். தற்போதும் தொடர்ந்து பாஜவுக்கு எதிராக பேசி வருகிறார். அவருடன் 5 எம்பிக்களும், 5 எம்எல்ஏக்களும் பேசி வருகின்றனர். இது அவருக்கு மேலும் பலத்தை கொடுத்துள்ளது. ஆனால் தம்பித்துரை தொடர்ந்து பேசி வருவது பாஜவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலிடத்தில் புகார் செய்துள்ளனர்.

மேலிடமும், தங்களது வருத்தத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பகிர்ந்துள்ளனர். இதனால் தம்பிதுரை மீது நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து இருவரும் நேற்று ஆலோசனை நடத்தினர். ஆனால் அதில் எந்த முடிவும் எடுக்கவில்லை. அவ்வாறு எடுத்தால் மேலும் பலர் எதிர்த்து குரல் கொடுக்க தயாராக உள்ளனர். இதனால் அதிமுகவில் தேவையில்லாமல் பிரச்னை உருவாகி, கட்சி உடையும் நிலை ஏற்படலாம் என்று கருதுகின்றனர். இதனால் தம்பிதுரை மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இது தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: