அழிந்து வரும் அரிய கடல்வாழ் உயிரினங்கள்

*பாதுகாக்க கடல் ஆர்வலர்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம் : மன்னார் வளைகுடா கடல்பகுதியில் அழிந்து வரும் அரிய கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கை தேவையென கடல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையிலான மன்னார் வளைகுடா 320 கி.மீ. நீள கடற்கரையையும், 10 கி.மீ. அகலத்தையும் கொண்ட வளமுடைய பகுதி. நாளடைவில் இந்த மன்னார் வளைகுடாவின் அபரிமித வளங்களுக்கு மனித செயல்பாடுகள் மற்றும் இயற்கை இடற்பாடுகள் காரணமாக பல இடையூறுகள் வர ஆரம்பித்தன. கிட்டதட்ட 6 ஆயிரம் விசைப்படகுகள், 15 ஆயிரம் நாட்டுப்படகுகள் இப்பகுதியில் மீன்பிடிக்க செல்கின்றன. தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிப்பதால் இயற்கை வளங்கள் அழிந்து வருகின்றன.

இப்பகுதியில் ஏற்கனவே கடல்பசு, கடல் குதிரை, கடல் அட்டை, கடல் பல்லி மற்றும் டால்பின்கள் போன்ற பல அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதால் இந்த உயிரினங்களை அழிந்து விடாமல் பாதுகாப்பதற்காக மத்திய அரசும் மாநில அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த அபூர்வ இனங்களை மீனவர்கள் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. கடல்வள பாதுகாப்பு பணி மேற்கொள்ளபடா விட்டால் கடல்வளம் விரைவில் அழிந்துவிடும் என்பதால், கடல்வள பாதுகாப்பில் வனத்துறை மற்றும் மீன்துறை அதிகாரிகள் முக்கிய பங்காற்றுகின்றனர். வனத்துறையும் மீன்துறையும் இணைந்து கூட்டுரோந்து மற்றும் தணிக்கை மேற்கொள்ளவும் அழிவு தரும் வலைகள் பயன்பாட்டினையும், தடை செய்யப்பட்ட உயிரினங்களை பிடிப்பதை தடுக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2004ம் ஆண்டு சுமத்ரா தீவில் ஏற்பட்ட சுனாமியால் கடலில் பலவகை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆழ்கடலில் மட்டுமே வசிக்கக்கூடிய டால்பின் மீன்கள் ஆழம் குறைந்த மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடல் பகுதிக்கு வந்து மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விடுகின்றன. சமீப காலமாக அரியவகை மீன்கள், கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மன்னார் வளைகுடா பகுதியில் 10 திமிங்கலங்கள், 18 டால்பின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. இதுதவிர 10க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள், கடல் பசுக்களும் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. ஏற்கனவே சேது கால்வாய் தோண்டும்போது அடிக்கடி இறந்து கரை ஒதுங்கிய டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் தற்போது பணிகள் நடைபெறாததால் இறந்து கரை ஒதுங்குவது குறைந்தது.

இருப்பினும் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அரிய வகை மீன்கள் இறப்பதற்கான உண்மையான காரணத்தை சம்மந்தப்பட்ட கடல்வாழ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். மண்டபம் அருகே மரைக்காயர்பட்டிணத்தில் கடல்வாழ் மீன்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்கான மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: