எந்த விலை கொடுத்தாவது ஜனநாயகத்தை காக்க வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘‘ஜனநாயகமே நமது மிகப்பெரிய பலம். எந்த விலை கொடுத்தாவது அதை நாம் பாதுகாக்க வேண்டும்’’ என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:ஒருசமயம் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, பார்வையாளர்கள் பகுதியில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த எம்பிக்கள் அமர்ந்திருப்பதை பார்த்தேன். அப்போது, ‘நாம் என்ன செய்கிறோம் என்பதை பார்ப்பதற்காக அந்த  எம்பிக்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள். ஆனால் நாமோ கூச்சலிட்டு, அமளியில் ஈடுபட்டிருக்கிறோம். அவர்கள் வந்திருக்கும் சமயத்திலாவது நம்மால் அவை விதிப்படி நடக்க முடியாதா?’ என எண்ணினேன்.

பின்னர் அந்த ஆப்கன் எம்பிக்கள் என்னை என் அலுவலகத்தில் சந்தித்தனர். நாடாளுமன்றத்தில் அவர்களால் ஆரோக்கியமான விவாதத்தை காண முடியாததற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். அப்போது, அவர்களில் ஒருவர்  திடீரென அழத் தொடங்கினார். நான் அதிர்ச்சி அடைந்தேன். ‘ஏன் அழுகிறீர்கள்?’ என கேட்டேன். அதற்கு அந்த பெண் எம்பி, ‘நீங்கள் உங்கள் நாட்டில், நாடாளுமன்றத்திற்குள் விவாதம் செய்கிறீர்கள். நாங்கள் எங்கள் நாட்டில்  துப்பாக்கிளுடன் அதை எதிர்கொள்கிறோம்’ என்றார்.

எனவே, ஜனநாயகமே நமது மிகப்பெரிய பலம். எந்த விலை கொடுத்தாவது அதை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ராகுல் கூறி உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: