வல்லூர் அனல் மின்நிலையத்தை திறக்கலாம்: ஐகோர்ட் உத்தரவுக்கு தடை

புதுடெல்லி:  தமிழகத்தில் வல்லூர் அனல் மின்நிலையத்தில் உள்ள 3 அலகுகளிலும் தலா 500 மெகாவாட் வீதம் மொத்தம் 1500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வல்லூர் அனல் மின்நிலைய  நிர்வாகம் எண்ணூரில் உள்ள சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டி வருவதாக சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில்,“மத்திய அரசின் உத்தரவை மீறி சதுப்பு  நிலங்களில் நிலக்கரி சாம்பலை கொட்டி வருவதாகவும், அனல் மின் நிர்வாகத்தின் இந்த செயல்பாடுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும்  குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வல்லூர் அனல் மின்நிலையத்திற்கு தடை விதிக்கப்படுகிறது இதையடுத்து, வல்லூர் அனல் மின்நிலையம் மூடப்பட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்க மறுத்த டிவிஷன் பெஞ்ச் அமர்வு நீதிபதிகள், தடையை வரும் 18ம் தேதி வரை நீட்டித்தும்.மேலும், சுற்றுச்சூழல்துறை ஆலையை திறப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்தால் அதன்பிறகு நீதிமன்றம் முடிவெடுக்கும் எனவும் கடந்த 10ம் தேதி உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து உயர் நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவிற்கு எதிராக அனல் மின்நிலையத்தின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின்  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆலை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கவுரவ் வாதத்தில், “வல்லூர் மின் நிலையம் மூடப்பட்டதால் சென்னையில் கடும் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தடையை நீக்கி உயர் நீதிமன்ற  உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என வாதிட்டார்.

இதையடுத்து தலைமை நீதிபதி உத்தரவில், “வல்லூர் அனல் மின்நிலையம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோர் நீதிமன்றத்தில் தங்களது பதிலை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்படுகிறது’’  என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: