நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்., கூட்டணிக்கு 40 தொகுதிகளில் வெற்றி: திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆய்வு கூட்டம் சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவல்ல பிரசாத், டாக்டர் செல்லக்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்துக்கு பிறகு திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் உத்தரவின்படி நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் மேலாண்மை குழு உள்பட பல்வேறு குழுக்களை அமைப்பது தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.இது போன்று இன்னும் பல்வேறு கட்டங்களாக இந்த கூட்டம் நடத்தப்படும். திமுக, காங்கிரஸ் கூட்டணி பலமாகவும், வலுவாகவும் இருக்கிறது. இந்த கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை பெறும். எப்போது தேர்தல் வந்தாலும், மத்தியில் உள்ள மதவாத பாஜ அரசையும், மாநிலத்தில் உள்ள ஊழல் அதிமுக அரசையும் மக்கள் வெளியேற்றுவதற்கு தயாராக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.ஒன்றாக பங்கேற்பு

தமிழக மகிளா காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா சத்தியமூர்த்தி பவனில்  நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி தலைமை தாங்கினார். இந்த விழாவில் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டனர். மேலும் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, முன்னாள் மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கடந்த சில மாதமாக ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் ஒன்றாக இணைந்து பொங்கல் விழாவில் பங்கேற்றது கட்சியினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: