ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்: புஜாரா 3-வது இடத்திற்கு முன்னேற்றம்...தோனி சாதனையை முந்தினார் ரிஷப் பண்ட்

துபாய்: ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் புஜாரா ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 சதம், ஒரு அரைசதம் உட்பட 521 ரன்கள் குவித்த புஜாரா 881 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 897 புள்ளிகளுடன் 2-ம் இடத்தை பிடித்துள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தரவரிசை பட்டியலில் அசுரவேகத்தில் முன்னேறி 17-வது இடத்தை பிடித்துள்ளார். 21 வயதே ஆன இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகமானார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் சிறப்பாக விளையாடி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதன்பின்னர் இந்தியாவில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இரண்டு முறை 90-களில் ஆட்டமிழந்தார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மொத்தம் 7 இன்னிங்சில் விளையாடிய பண்ட் 350 ரன்கள் குவித்தார்.

சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் அதிரடியாக ஆடி ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் விளாசினார். இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ரிஷப் பண்ட் 2 சதம், 2 அரைசதங்களுடன் 696 ரன்கள் குவித்துள்ளார். இவரது சராசரி 49.71 ஆகும். இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 21 இடங்கள் முன்னேறி தற்போது 17-வது இடத்தை பிடித்துள்ளார். ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முன்னிலை வகித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். இதற்கு முன்பு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிகபட்சமாக 19-வது இடத்தை பிடித்ததுதான் இந்திய விக்கெட் கீப்பர் ஒருவரின் சிறப்பான தரவரிசையாக இருந்தது.

அதோடுமட்டுமல்லாது அதிக புள்ளிகள் பெற்ற இந்திய விக்கெட் கீப்பராகவும் ரிஷப் பண்ட் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் அதிகபட்சமாக தோனி 662 புள்ளிகளும், பரூக் இன்ஜினீயர் 619 புள்ளிகளும் பெற்றிருந்தனர். 673 புள்ளிகள் பெற்று ரிஷப் பண்ட் இந்த சாதனையையும் முறியடித்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குதவற்கு முன் 59-வது இடத்தில் இருந்த பண்ட் 20 கேட்ச்கள் பிடித்ததுடன், 350 ரன்களும் குவித்ததன் மூலம் மிக வேகமாக 17-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: