5 மாநில சட்டப்பேரவை தேர்தல்........ வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

ஜெய்பூர்: ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. இதற்கான வாக்கு எண்ணிக்கை அந்தந்த மாநிலங்களில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன் முடிவுகள், மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டம் என்பதால் பா.ஜ, காங்கிரஸ், டிஆர்.எஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பதற்றத்துடன் முடிவை எதிர்நோக்கியுள்ளன. சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலை தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 6ம் தேதி அறிவித்தது. சட்டீஸ்கர் மாநிலத்துக்கு கடந்த 12, 20ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது.

மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் கடந்த மாதம் 28ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ராஜஸ்தான் தெலங்கானாவில் கடந்த 7ம் தேதி தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டன. இதன் முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. 5 மாநிலங்களில், 670 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ள 1.74 லட்சம் ஓட்டு பதிவு இயந்திரங்கள், 8,500 வேட்பாளர்களின் தலைவிதியை முடிவு செய்கின்றன.

இதையொட்டி, 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களில்  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்கள், அரசியல் கட்சிகளின் ஏஜென்டுகள் முன்னிலையில் திறக்கப்பட்டு, அனைத்து வாக்கு இயந்திரங்களும், ஓட்டு எண்ணும் மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகள்  உடனுக்குடன் தெரிந்து கொள்ள வசதியாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் அவ்வப்போது  முடிவுகள் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 11 மணிக்கு முன்னணி நிலவரம் முழுமையாக தெரிந்துவிடும். மதியம்  3 மணிக்குள் எந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று  தெரியவரும். இந்த முடிவுகள் அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுவதால், இதன் முடிவுகளை பா.ஜ, காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பதட்டத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: