தேசிய துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் 13 வயது சிறுமி இஷா சிங் சீனியர் பிரிவில் தங்கம் வென்றார்

திருவனந்தபுரம்: தேசிய துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் சீனியர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், நட்சத்திர வீராங்கனைகள் மானு பேக்கர், ஹீனா சித்துவின் சவாலை முறியடித்த 13 வயது சிறுமி இஷா சிங் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். கேரளாவில் நடைபெற்று வரும் 62வது தேசிய துப்பாக்கிசுடுதல் தொடரில், தெலங்கானாவை சேர்ந்த இஷா சிங் தொடர்ச்சியாக 3 தங்கப் பதக்கங்களை வென்று அபார சாதனை படைத்துள்ளார். மகளிர் ஜூனியர் மற்றும் இளைஞர் பிரிவு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்ற அவர், நேற்று சீனியர் பிரிவில் களமிறங்கினார்.

உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த் மற்றும் யூத் ஒலிம்பிக்சில் தங்கப் பதக்கம் வென்றவரான மானு பேக்கர், உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கங்களை வென்றுள்ள அனுபவ வீராங்கனை ஹீனா சித்து, ஓஎன்ஜிசி அணியின் முன்னாள் சாம்பியன் ஷ்வேதா சிங், தமிழகத்தின்  நிவேதா ஆகியோரின் கடுமையான போட்டியை சமாளித்து அபாரமாக செயல்பட்ட இஷா 241.0 புள்ளிகளைக் குவித்து முதலிடம் பிடித்தார். நடப்பு சாம்பியன் மானு பேக்கர் 238.9 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், ஷ்வேதா சிங் 217.2 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர். செகந்தராபாத் போல்ட்டன் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் இஷா, சீனியர் வீராங்கனைகளுடன் போட்டியிட்டு தங்கம் வென்று புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். இவர் ஒலிம்பிக் சாதனையாளரான ககன் நரங்கின் ஷூட்டிங் அகடமியில் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: