சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் அனைத்து வித விலங்குகளுக்கும் தடை..! : புதிய சட்ட வரைவு கொண்டு வர மத்திய அரசு முடிவு

டெல்லி: சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் அனைத்து விதமான விலங்குகளை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்காக வன விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல அமைப்புகளிடமிருந்து மத்திய அரசுக்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. எனவே சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் விலங்குகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. சர்க்கஸ் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பயிற்சி என்ற பெயரில் விலங்குகள் துன்பறுத்தப்படுகின்றன. இதனால் விலங்குகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். எனவே சர்க்கஸ் உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் அனைத்து விலங்குகளையும் பயன்படுத்த தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக புதிய சட்ட வரைவை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி எந்த நிகழ்ச்சிகள் அல்லது கண்காட்சி, சர்க்கஸ், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றில் இனி எந்த விலங்குகளையும் பயன்படுத்த கூடாது என சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகளை பயன்படுத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குதிரை, குரங்கு, யானை, நாய்கள் உள்ளிட்ட விலங்குகளை பயன்படுத்தவும் தற்போது தடை கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு விலங்குகள் நல அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் புதிய முடிவால் இனி சர்க்கஸ்களில் விலங்குகளுக்கு பயிற்சி அளிப்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: