வடக்கு இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு அருகில் கடந்த ஆண்டு நவம்பர் 29ம் தேதி உருவான ஒரு வெப்ப மண்டலச் சூறாவளி பின்னர் ஓகி புயல் ஆகியது. நிலப்பகுதிக்கு அருகில் உருவானதால் ஆரம்பத்தில் இது வலுவடையவில்லை. எனினும் அரபிக் கடலை அடைந்தபோது டிசம்பர் 1ம் தேதி இது வலுவடையத் தொடங்கியது. இலங்கையில் சேதம் ஏற்படுத்திய பிறகு இது இலட்சத்தீவுகள் மற்றும் இந்திய நிலப்பகுதியை நோக்கி நகரத் தொடங்கியது. டிசம்பர் 29ம் தேதி நள்ளிரவு தொடங்கி 30ம் தேதி அதிகாலைக்குள் குமரி மாவட்டத்தை புரட்டிப்போட்டது. இப்புயலின் இறுதிக்கட்டத்தில் இது குஜராத்தைக் கடந்தது. இப்புயலுக்கு ‘ஓகி’ என்ற பெயர் வங்காளதேசத்தால் சூட்டப்பட்டது. ஓகி என்ற சொல்லுக்கு வங்காள மொழியில் ‘கண்’ என்று பொருள்.
மிகவும் கடுமையான சுழல் புயல் ஒகி என்பது இலங்கை மற்றும் இந்தியாவின் பகுதிகள் அழிவு ஏற்படுத்திய ஒரு வலுவான வெப்பமண்டல சூறாவளி என்று வருணிக்கப்பட்டது. குமரி மாவட்டம் புயல் காற்றை உணரும் முன்னரே அது சேதத்ததை ஏற்படுத்தி சென்றுவிட்டது. இது 2015ம் ஆண்டின் ‘மெக்’ சூறாவளிக்குப் பிறகு அரபி கடலில் ஏற்பட்ட மிகவும் கடுமையான வெப்பமண்டல சூறாவளி என கணிக்கப்பட்டுள்ளது. 2017 வட இந்திய பெருங்கடல் சூறாவளி பருவத்தின் மூன்றாவது மற்றும் வலுவான பெயரிடப்பட்ட புயல் இதுவாகும். ஓகி கிழக்கு அந்தமான் கடலில் நவம்பர் 21, 2017 இல் உருவான குறைந்த அழுத்தப் பகுதியில் தோன்றியது. பின்னர் வங்காள விரிகுடாவின் தெற்குப் பகுதியை கடந்து செல்லும் போது, வளிமண்டல நிலைமைகள் இது ஒரு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாற உதவின. நவம்பர் 29ம் தேதி இது இலங்கையில் சொத்து மற்றும் வாழ்க்கைக்கு சேதம் விளைவித்தது. அதிக வளிமண்டல ஈரப்பதம் மற்றும் இலங்கை மற்றும் முக்கியமாக இந்தியாவில் கன்னியாகுமரி இடையேயான வெப்பமான கடல் மேற்பரப்பு வெப்பநிலை காரணமாக நவம்பர் 30 ம் தேதி ஒகி ஒரு சூறாவளி புயலாகத் தீவிரமடைந்தது.
இந்தியாவில் கன்னியாகுமரி அருகே நெருங்கும் போது, சூறாவளி ஒகி தன் பாதையை மாற்றியது. அரபிக்கடலில் இலட்சத்தீவை நோக்கிச் செல்லும் போது தீவிரமடைந்தது. இப்புயல் இந்தியாவின் பிரதான கடலோரப் பகுதியிலிருந்து தூரத்திற்குச் சென்ற போதும் கட்டமைப்புகள் மற்றும் சொத்துகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் தென் பகுதிகளில் குறைந்தபட்சம் 218 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். டிசம்பர் 2 ம் தேதி இலட்சத்தீவை ஒகி தாக்கியது. தென்னை மரங்களை சாய்த்து தீவுகளில் உள்ள வீடுகள், மின் இணைப்புகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்குச் சேதம் விளைவித்தது. நிலவிய சூழ்நிலைகள் காரணமாக கரையோரத்தில் நுழைவதற்கு முன்பு திசம்பர் 6 ம் தேதி இந்தியாவில் குஜராத்தின் தென் கடற்கரைக்கு அருகே ஒகி வலுவிழந்தது. குமரி மாவட்டம் முழுவதும் ஓகி புயலின் தாண்டவத்தால் நிலைகுலைந்தது. புயல் கரையை கடக்காமலேயே அதன் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் மாவட்டம் திணறியது. குமரியிலும், கேரளாவிலும் மீன்பிடிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அரபிக்கடலில் புயலில் சிக்கி கரை திரும்பாத நிலை ஏற்பட மாவட்டமே பதட்டத்திற்கு ஆளானது. லட்சக்கணக்கான மரங்கள் சாலைகளில் வேருடன் பெயர்ந்து விழுந்தன. மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. 10 நாட்களுக்கு மேலாகியும் மின்சாரம் கிடைக்காமல் கிராமங்கள் இருளில் மூழ்கின. நவம்பர் 30ம் தேதி புயல் வீசிய நிலையில் டிசம்பர் 12ம் தேதி முதல்வரும், 20 நாட்களுக்கு பின்னர் டிசம்பர் 19ம் தேதி பிரதமரும் குமரி மாவட்டம் வருகை தந்தார். ஆய்வறிக்கைகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.ஓகி புயல் பாதிப்புகளை பார்வையிட குமரி மாவட்டம் வருகை தந்த பிரதமரிடம் முதல்வர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். ஆனால் அவை இன்னும் கோரிக்கைகளாகவே இருந்து வருகிறது. கடலில் இறந்த, மாயமான மீனவர்களை போன்று விவசாயிகளுக்கும் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் கேட்டும், விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு கடைசி வரை கண்டு கொள்ளவில்லை. நிவாரண தொகை உயர்த்தப்பட வில்லை. உடைந்த வீடுகளுக்கு பகுதியளவு சேதத்திற்கு ரூ.4100ம், முழு சேதத்திற்கு ரூ.5 ஆயிரமும் வழங்கி தனது நிவாரண உதவிகளை நிறுத்திக்கொண்டது. இந்த ெதாகையை பெற்றுக்கொண்ட விவசாயிகளுக்கு வீட்டின் மீது விழுந்த மரத்தை கூட அகற்ற கூலியாக கூட போதவில்லை என்ற நிலை ஏற்பட்டது. மீனவர்களுக்கு வழங்கப்பட்டது போன்று ஓகி புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் நிவாரணம் கிடைக்கவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டன. நான்கு வழி சாலைக்கு வழங்கப்பட்டதுபோன்று தென்னை, வாழைக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கேட்டும் தமிழக அரசு மவுனம் சாதித்தது. மொத்தத்தில் ரூ.100, ரூ.50 என்று வங்கிக்கணக்கில் நிவாரண தொகை பெற்ற விவசாயிகளும் மாவட்டத்தில் உள்ளனர். லட்சக்கணக்கான ரப்பர் மரங்களை இழந்தவர்களுக்கு இழப்பீடு முறையாக கிடைக்கவில்லை. மீட்பு பணிகள் ஓரளவு நடைபெற்றாலும் மறு சீரமைப்பு என்பது மாவட்டத்தில் கேள்விக்குறியாகியது. ஓகி புயலால் சரிந்து விழுந்து மாற்றப்பட்ட மின் கம்பங்களில் பலவற்றிலும் இன்னும் மின் விளக்குகள் பொருத்தப்பட வில்லை. பள்ளி கட்டிடங்களில் சரிந்த விழுந்த மரங்கள் அகற்றப்பட வில்லை.* குமரி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குள் சென்று காணாமல் போகும் தருணத்தில் அவர்களை மீட்கும் பொருட்டு ஹெலிகாப்டர் தளம் அடங்கிய இந்திய கடலோர காவல்படை நிலையம் ஒன்றை பிரதமரிடம் வலியுறுத்தியதாக முதல்வர் தெரிவித்திருந்தார். அதற்கான நடவடிக்கைகள் ஏதும் இன்னமும் தொடங்கப்பட வில்லை. ஓகி புயல் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஓகி புயல் பாதிப்பு குறித்து தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பிரதமர் நரேந்திரமோடி ஆய்வு செய்து பாதிப்பிற்குரிய மாநிலங்களுக்கு முழு நிவாரண தொகை வழங்கப்படும் என உறுதி அளித்தார். ஓகி புயலால் பாதிப்பு அடைந்த தமிழகத்திற்கு ரூ.133.05 கோடியும், கேரளாவுக்கு ரூ.169.06 கோடியும், மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. ஓகி புயலால் பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளதால் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேட்டு பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று முதல்வரும் தெரிவித்தார். புயலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடி நிவாரணமாக ரூ.747 கோடியும், நிரந்தர சீரமைப்பு பணிக்கு ரூ.5255 கோடியும், சென்னை மற்றும் இதர கடலோர மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க ரூ.4047 கோடியும் என மொத்தம் ரூ.9 ஆயிரத்து 302 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கவேண்டும் என்று கூறியுள்ளோம்.உயிரிழப்பிற்கு ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாகவும், ஊனமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாகவும், வாழை மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500ல் இருந்து 1 லட்சத்து 25 ஆயிரம் ஆகவும், ரப்பர் மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 18 ஆயிரத்தில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ஆகவும் உயர்த்தப்பட வேண்டும் என்றும் முதல்வர் கேட்டிருந்தார். இவற்றில் எந்த முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை. மேலும் குமரி மாவட்ட மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கடற்படை நிலையம் ஒன்றை அமைக்கவும், அதில் ஹெலிகாப்டர் இறங்குதள வசதி அமைக்கவும், தொலைதொடர்பு வசதிகள், குளிர்பதன வசதி, மீன்பதப்படுத்தும் பூங்காவுடன் கூடிய ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் அமைக்கவும் வலியுறுத்தியுள்ளோம். பேரிடர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரண தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும். தமிழகத்தில் கடலோரங்களில் உயர் அதிர்வெண் கட்டுப்பாட்டு அறைகளை அமைக்கவும், உயர் அதிர்வெண் சேனல்களை உபயோகிக்கவும் மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மீனவர்களுக்கு அவ்வப்போது வானிலை பற்றிய அறிவிப்புகளை தமிழில் தெரியப்படுத்த பிரத்யேக செயற்கைகோள் ரேடியோ அலைவரிசை ஒன்றினை உடனடியாக அமைக்கவும் வேண்டும் என்றும் முதல்வர் வேண்டுகோள் வைத்திருந்தார். ஆனால் இவை அனைத்தும் கோரிக்கைகளாகவே இருந்து வருகிறது.2017-2018 ஆண்டுக்கான கேரள, தமிழக அரசுகளின் ஒகி புயல் நிவாரணப்பணிகளுக்கு கைகொடுக்கும் வகையில் மாநில பேரிடர் மீட்பு தொகையில் இரண்டாவது தவணைத் தொகையை மத்திய அரசு விடுவித்தது. மாநில பேரிடர் மீட்பு தொகையில் மத்திய அரசின் பங்கானது கேரளாவுக்கு ரூ.153 கோடியும், தமிழகத்துக்கு ரூ.561 கோடியும் ஆகும். ஆனால் வழக்கமான பேரிடர் நிவாரண மீட்பு தொகையாக இது இருந்தாலும் ஓகி புயல் நிரந்தர சீரமைப்பு பணிகளுக்கு தமிழக அரசு கேட்ட ரூ.5225 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. அதனை தமிழக அரசும் கண்டு கொள்ளவில்லை. இதனால் மாவட்டத்தில் ஓகி புயலுக்கு பிந்தைய மறு சீரமைப்பு என்பது இன்றும் கேள்விக்குறியாகியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி