எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் மக்கள் வாக்களித்தபின் ஒப்புகை சீட்டை சரிபார்க்க வேண்டும் : சந்திரபாபு நாயுடு பேச்சு

கம்மம்: ‘‘எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் வாக்களித்தபின், வாக்காளர் ஒப்புகை சீட்டை சரிபார்க்க வேண்டும்’’ என தெலங்கானா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் முறைகேடுகளுக்கு வாய்ப்புள்ளது, எனவே மீண்டும் வாக்குச் சீட்டை கொண்டு வர வேண்டும் என தேர்தலில் தோல்வியடையும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில், தெலங்கானாவில் டிசம்பர் 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கம்மம் வந்திருந்தார். தே.ஜ கூட்டணியிலிருந்து வெளியேறிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்த கூட்டத்தில் முதல் முறையாக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நாம் தற்போது எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரம் பயன்படுத்துகிறோம். நீங்கள் யாருக்கு ஓட்டளித்தீர்கள் என்பதை  விவிபிஏடி இயந்திரத்தில் சரிபார்க்க வேண்டும். நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ள நமக்கு உரிமை உண்டு.

தொழில்நுட்பத்தை நான் நன்கு அறிவேன். செல்போன் பேச்சை கூட தற்போது பதிவு செய்யலாம். எனது கோரிக்கையை அடுத்துதான் விவிபிஏடி இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.

பா.ஜ அல்லாத கட்சிகள் ஒன்று சேர்ந்து, தே.ஜ கூட்டணி அரசுடன் போராட வேண்டும் என்ற வரலாற்று தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை தே.ஜ கூட்டணி அரசு அழித்து வருகிறது. நான் தே.ஜ கூட்டணியில் இல்லாத கட்சிகளின் கூட்டத்தை டிசம்பர் 10ம் தேதி கூட்டியுள்ளேன். யாருக்கு ஆதரவு அளிக்கிறோம் என்ற தெளிவான நிலைப்பாட்டை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும்(டிஆர்எஸ்) அகில இந்திய மஜ்லிஸ் கட்சியும் தெளிவுப்படுத்த வேண்டும். மக்கள் டிஆர்எஸ் மற்றும் மஜ்லிஸ் கட்சிக்கு வாக்களித்தால், அது பா.ஜ.வுக்குத்தான் பயனளிக்கும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: