உலக பாக்சிங் சாம்பியன்ஷிப் ... 6-வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் மகத்தான சாதனை

புதுடெல்லி: மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் 48 கிலோ லைட் பிளைவெயிட் பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் சாம்பியன் பட்டம் வென்றதுடன் 6வது முறையாக தங்கப் பதக்கத்தை கைப்பற்றி மகத்தான சாதனை படத்தார்.பரபரப்பான இறுதிப் போட்டியில் உக்ரைனின் ஹன்னா ஒகோட்டாவுடன் நேற்று மோதிய கோம் (35 வயது), அபாரமாக செயல்பட்டு 5-0 என்ற கணக்கில் (30-27, 29-28, 29-28, 30-27, 30-27) வெற்றியை வசப்படுத்தினார். உலக சாம்பியன்ஷிப்பில் 6வது முறையாக தங்கப் பதக்கத்தை முத்தமிட்ட அவர் தனது பதக்க வேட்டையின் எண்ணிக்கையை 7ஆக உயர்த்தியுள்ளார். அவர் ஏற்கனவே 5 தங்கம், ஒரு வெள்ளி வென்றிருந்தார். 2010ம் ஆண்டுக்குப் பிறகு மேரி கோம் உலக சாம்பியன்ஷிப்பில் மீண்டும் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்து மழை: திருமணமாகி 3 குழந்தைகளுக்கு தாயான பின்னர், 35 வயதில் உலக பாக்சிங்கில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘உலக மகளிர் பாக்சிங்கில் தங்கம் வென்ற மேரி கோமுக்கு வாழ்த்துக்கள். உலக அளவிலான போட்டியில் தனது விடாமுயற்சியால் மீண்டும் சாதனை படைத்துள்ள அவர் இந்திய இளைஞர்களுக்கு ஈடு இணையற்ற ஊக்கசக்தியாக விளங்குகிறார். இது தனிச்சிறப்பு வாய்ந்த வெற்றி’ என்று பாராட்டி உள்ளார்.விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ராத்தோர், சச்சின் டெண்டுல்கர், விஜேந்தர் சிங்,சாய்னா நெஹ்வால், சுரேஷ் ரெய்னா உட்பட பிரபலங்கள் பலரும் கோமுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த இலக்கு: உலக பாக்சிங் சாம்பியன்ஷிப்பில் 6 முறை தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருக்கும் மேரி கோம் கூறுகையில், ‘சிறிது உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறேன். ஒலிம்பிக் போட்டியில் 48 கிலோ எடை பிரிவு இல்லை என்றாலும், 2020ல் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டித் தொடருக்கு தகுதி பெற முடியும் என நம்புகிறேன். ரியோ ஒலிம்பிக்சுக்கு தகுதி பெற முடியாததை இன்னும் கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் இந்த தங்கமான தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டோக்கியோ ஒலிம்பிக்சில் 51 கிலோ எடை பிரிவில் களமிறங்கி சாதிப்பது மிகக் கடினம் என்பதை உணர்ந்துள்ளேன். ஆனாலும், டோக்கியோவில் தங்கம் வெல்வதே எனது அடுத்த லட்சியக் கனவாக இருக்கும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: