மகளிர் உலக பாக்சிங் சாம்பியன்ஷிப் 6வது தங்கத்தை நோக்கி மேரி கோம்: இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார்

புதுடெல்லி: மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம், வட கொரிய வீராங்கனை கிம் ஹயாங்க் மியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் 6வது தங்கத்தை கைப்பற்றும் மகத்தான சாதனையை மேரி கோம் நெருங்கி இருக்கிறார். மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில், நேற்று நடந்த 48 கிலோ லைட் பிளைவெயிட் பிரிவு அரை இறுதிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் (35 வயது), வட கொரியாவின் கிம் ஹயாங்க் மியை எதிர்த்து விளையாடினார். ஒவ்வொரு சுற்றிலும் கடும் போட்டி நிலவியது. இதில் சிறப்பாக செயல்பட்ட மேரி கோம் 29-28, 30-27, 30-27, 30-27, 30-27 என்ற புள்ளிகளுடன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் மேரி கோம், உக்ரைனின் ஹன்னா ஒகோடாவை எதிர்கொள்கிறார். இப்போட்டி நாளை மறுதினம் நடக்க உள்ளது. இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம், உலக குத்துச்சண்டையில் மேரி கோம் தனது 6வது தங்கப் பதக்கத்தை நெருங்கி இருக்கிறார். இதுவரை உலக அளவில் இத்தொடரில் அதிக பதக்கங்கள் வென்ற வீராங்கனையாக மேரி கோமும், அயர்லாந்தின் கேட்டி டெய்லரும் உள்ளனர்.

மேரி கோம் 5 தங்கம், 1 வெள்ளி என 6 பதக்கங்களுடனும், டெய்லர் 5 தங்கம், 1 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் சமநிலையில் உள்ளனர். இறுதிச் சுற்றில் மேரி கோம் எந்த பதக்கம் வென்றாலும் அதிக பதக்கம்(7) வென்ற வீராங்கனையாக சாதனை படைக்கலாம். அதே நேரத்தில் தங்கம் வெல்லும் பட்சத்தில், 6வது தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற மகத்தான சாதனையையும் படைக்கலாம். மேலும், உலக குத்துச்சண்டை வரலாற்றில் கியூபா வீரர் பிளிக்ஸ் சவோன் (1986-1989) மட்டுமே 6 தங்கம், 1 வெள்ளி என 7 பதக்கம் கைப்பற்றுள்ளார். அவரது சாதனையையும் மேரி கோம் சமன் செய்ய முடியும். ஏற்கனவே கடந்த ஆண்டு போலந்தில் நடந்த போட்டியில், ஒகோடாவை வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நாளை மறுதினம் நடக்கும் இறுதிச்சுற்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்றொரு இந்திய வீராங்கனையான லல்லினா 69 கிலோ எடைப்பிரிவு அரை இறுதியில் நேற்று சீன தைபேயின் சென் நியன் சென்னிடம் தோற்று வெண்கலத்துடன் ஆறுதல் அடைந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: