ரூ.3.33 கோடி மதிப்பீட்டில் தேனி பைபாஸ் ரோடு விரிவாக்கம் துவங்கியது

தேனி: குறுகிய சாலையால் அடிக்கடி விபத்து ஏற்படுத்தி வந்த தேனி பைபாஸ் ரோட்டினை அகலப்படுத்தும் விரிவாக்கப்பணி ரூ.3.33 கோடி மதிப்பீட்டில் துவங்கியது. தேனி நகருக்கான புதிய பஸ்நிலையம் 2013ம் ஆண்டு திறக்கப்பட்டது. இப்பஸ் நிலையம் திறக்கப்பட்ட பிறகு பெரியகுளம் வழியாக திண்டுக்கல், திருப்பூர், சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சை,திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் தேனி புதிய பஸ்நிலையத்திற்கு வந்து செல்கின்றன.மேலும், இவ்வழித்தடத்தில் சென்று வரக்கூடிய அனைத்து பஸ்களும் தேனி நகரான அல்லிநகரம், பழைய பஸ்நிலையம் வராமல் தேனி நகரின் எல்லையாக உள்ள அன்னஞ்சி பிரிவில் இருந்து துவங்கும் தேனி பைபாஸ் ரோட்டின் வழியாகவே தேனி புதிய பஸ்நிலையத்திற்கு வந்து செல்கின்றன. இதனால் இச்சாலையில் பஸ் போக்குவரத்து அதிகரித்ததுடன் டூவீலர் போக்குவரத்தும் அதிகரித்து விட்டது.

இதனால் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிப்போன இந்த பைபாஸ் சாலையானது அன்னஞ்சி பிரிவில் துவங்கி புதிய பஸ்நிலையத்தை கடந்து, தேனி நகர் மதுரை சாலை சந்திப்பு வரை 4.4 கிமீ நீளம் கொண்டதாகவும், 7 மீட்டர் அகலசாலையாகவும் உள்ளது. 7 மீட்டர் அகலமாக மிகக்குறுகியதாக இச்சாலை உள்ளதால், புதிய பஸ் நிலையத்தில் இருந்து அன்னஞ்சி பிரிவு வரையிலான பைபாஸ் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இப்புதிய பஸ்நிலையம் துவங்கிய ஐந்து ஆண்டுகளில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் சாலைவிபத்தில் மரணம் அடைந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து ஊனம் அடைந்துள்ளனர். எனவே, 7 மீட்டர் அகலமுள்ள சாலையை 13 மீட்டர் சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் தற்போது, அன்னஞ்சி பிரிவில் இருந்து தேனி நகர் மதுரை சாலை சந்திப்பு வரையிலான பைபாஸ் சாலையினை 4.4 கிமீ தூரத்திற்கு முதல்கட்டமாக 10.5 மீட்டர் அகல சாலையாக விரிவாக்கம் செய்ய மாநில நெடுஞ்சாலைத் துறை ரூ.3.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இதற்கான டெண்டர் கோரப்பட்டு பணிஆணை வழங்கியது. இதனையடுத்து, தற்போது அன்னஞ்சி பிரிவில் இருந்து முதல் 2.8 கிமீ நீளத்திற்கு 7 மீட்டர் சாலை 10.5 மீட்டர் அகலசாலையாகவும், இதனையடுத்து, 2.8 கிமீட்டர் தூரத்தில் இருந்து சிலகாரணங்களுக்காக அடுத்த 3.6 கிமீ தூரத்திற்கு தற்போதுள்ள அதே 7 மீட்டர் சாலையாகவும், இதனையடுத்துள்ள3.6 கிமீ தூரத்தில் இருந்து தேனி நகர் மதுரை ரோடு சந்திப்பு வரையிலான 4.4 கிமீ தூர சாலையை 10.5மீட்டர் சாலையாகவும் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இதற்காக பாலங்கள் அகலப்படுத்தும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,  சாலை விரிவாக்கப்பணி ரூ.3.33 கோடியில் துவங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் நிறைவடைந்து விடும். இதன்மூலம் இச்சாலையில் ஏற்பட்ட விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது. இதில் அன்னஞ்சி பிரிவில் இருந்து 2.8கிமீட்டரில் இருந்து3.6 கிமீ வரை நீதிமன்ற பிரச்னை உள்ளதால் இப்பகுதியில் சுமார் 800 மீட்டர் தூரம் மட்டும் 7 மீட்டர் சாலையாக தற்போதைக்கு தொடரும். நீதிமன்ற பிரச்னை தீர்வு கிடைத்ததும், அப்பகுதியிலும் 10.5 மீட்டர் சாலையாக மாற்றப்படும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: