2ம் கட்ட தேர்தல் பிரசாரம்: சட்டீஸ்கரில் மக்கள் அரசு காங். தலைவர் ராகுல் உறுதி

கொர்பா: சட்டீஸ்கரில் `மக்கள் அரசை அமைப்போம்’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். சட்டீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு  கடந்த 12ம் தேதி முதல் கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் 2ம் கட்ட தேர்தல் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது. இதில், மொத்தமுள்ள 90  தொகுதிகளில் 72 இடங்களுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, 2ம் கட்ட பிரசாரத்தை காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட கட்சிகள்  தொடங்கியுள்ளன. இந்நிலையில், கொர்பா பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ேபசினார்.  அதில் அவர் கூறியதாவது:

 நீர்வளம், வனவளம், சுரங்கம், தாதுவளம் ஆகியவற்றில் சட்டீஸ்கர் மாநிலம் வளமாக உள்ளது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி  செய்து வரும் பாஜ இந்த மாநிலத்தை முற்றிலும் சிதைத்து விட்டது. ஆளும் கட்சியின் கொள்கைகளால் மக்கள் ஏழைகளாக வைக்கப்பட்டுள்ளனர்.  பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட நிலங்கள் தொழிற்சாலைகள்  அமைக்கப்படாத நிலையில் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மக்கள் அரசு அமைப்போம். இதில்  விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்படும்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இது தவிர விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படும், மேலும், அவர்களுக்கு  போனஸ் வழங்கப்படுவதுடன், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும். பாஜ தலைமையிலான ராமன்சிங் சிங்  அரசு ஊழலில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பிரதமர் மோடி இது பற்றி வாய் திறக்க மறுக்கிறார்.  விவசாயிகள், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைக்காக நான் அரசியல் செய்கிறேன். ஏழைகளின் பணத்தில் 15 தொழில் அதிபர்களை  பாதுகாக்கவில்லை. இவ்வாறு ராகுல் பேசினார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: