புதுச்சத்திரம் பாசன வாய்க்காலை விவசாயிகளே தூர்வாரினர்

திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி அருகே 2 ஆண்டுகளாக தூர்வாரப்படாத பாசன வாய்க்காலை விஷ்ணம்பேட்டை கிராம விவசாயிகளே நேற்று தூர்வாரினர். திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்று புதுப்பாலம் அருகில் காவிரியில் இருந்து பாசனத்துக்காக புதுச்சத்திரம் வாய்க்கால் தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் மூலம் 1,009 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்த வாய்க்கால் மூலம் புதுச்சத்திரம், விஷ்ணம்பேட்டை, பவனமங்கலம், பொதகிரி வரையில் சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் செல்லும் தண்ணீர் விவசாயம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த வாய்க்காலை கடந்த 2 ஆண்டுகளாக தூர்வாராததால் தண்ணீர் ஏறி பாய்வதில்லை.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் கூறியும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் விஷ்ணம்பேட்டை கிராம விவசாயிகள், ஊராட்சி முன்னாள் தலைவர்கள் தங்கவேல், ராதாகிருஷ்ணன் தலைமையில் விவசாயிகளிடம் வசூல் செய்து பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று தூர்வாரினர். இதனால் தண்ணீர் வாய்க்காலில் தடையின்றி செல்வதை பார்த்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: