தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு கடந்த 3 நாட்களில் ரூ.330 கோடிக்கு மதுவிற்பனை: டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தகவல்

சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 3 நாட்களில்  ரூ.330 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையை விட ரூ.70 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ரூ.260 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முந்தைய நாளிலும் தீபாவளி அன்றும் மதுவிற்பனை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டு தீபாவளியன்று மது விற்பனையில் ஒரு புதிய சாதனையே ஏற்பட்டுள்ளது. சென்னையில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது மதுபோதையில் மோதலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அடிதடியில் ஈடுபட்டவர்களை ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் மது விற்பனை நடைபெறுகிறது என்பது அரசின் சாதனை கிடையாது என்றும், மது விற்பனையை படிப்படியாக குறைப்பதே அரசு மக்களுக்கு செய்யும் நன்மை என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அதிக மதுவிற்பனை பெருமைக்குரிய விஷயம் அல்ல என்று சமூக வலைத்தளங்களில் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: