போபர்ஸ் வழக்கு தீர்ப்புக்கு எதிர்ப்பு : சிபிஐ.யின் மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

புதுடெல்லி: போபர்ஸ் வழக்கில் கடந்த 2005ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த அப்பீல் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ராணுவத்துக்கு தேவையான 400 ஹோவிட்சர் பீரங்கிகளை வாங்க, ஸ்வீடனை சேர்ந்த போபர்ஸ் நிறுவனத்துடன் இந்தியா கடந்த 1986ம் ஆண்டில் 1,437 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இதில், ரூ.64 கோடி இந்திய அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்கப்பட்டது என ஸ்வீடன் ரேடியா செய்தியில் தகவல் வெளியானது. இந்த ஊழல் குறித்து சிபிஐ கடந்த 1990ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, போபர்ஸ் தலைவர் மார்டின், இத்தாலிய தரகர் குட்ரோச்சி, இந்தியாவில் இடைத் தரகர்களாக செயல்பட்ட இந்துஜா சகோதரரர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் இருந்து ராஜீவ் காந்தி பெயரை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 2004ம் ஆண்டு விடுவித்தது. 2005ம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இந்துஜா சகோதரர்கள் உட்பட அனைத்து குற்றவாளிகளையும் விடுவித்தது. குட்ரோச்சியை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் அரசு ரூ.250 கோடி செலவழித்து வீண் செய்ததால் அவரை இந்த வழக்கில் இருந்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் 2011ம் ஆண்டு விடுவித்தது.

பா.ஜ கடந்த 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், போபர்ஸ் வழக்கை மீண்டும் தோண்ட முடிவு எடுக்கப்பட்டது. கடந்த மக்களவை தேர்தலில் ரேபரேலி தொகுதியில் சோனியாவை எதிர்த்து பா.ஜ சார்பில் போட்டியிட்ட வக்கீல் அஜய் அகர்வால் என்பவர், போபர்ஸ் வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2005ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இந்த மனுவை கடந்த 2016ம் ஆண்டு விசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பு வெளியாகி 90 நாட்களுக்குள் ஏன் அப்பீல் செய்யவில்லை என கேட்டது. அப்போதைய ஐ.மு கூட்டணி அரசு ஒப்புதல் வழங்காததால் அப்பீல் செய்யவில்லை என சிபிஐ கூறியது.

இந்நிலையில், அமெரிக்காவில் ‘பேர்பேக்ஸ்’ என்ற தனியார் புலனாய்வு நிறுவனத்தை நடத்திய மைக்கேல் ஹெர்ஸ்மேன் என்பவர் அளித்த டி.வி பேட்டி கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியானது. அதில் அவர், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சுவிஸ் வங்கியில் ‘மாண்ட் பிளாங்க்’ என்ற பெயரில் கணக்கு வைத்திருந்ததை நான் கண்டுபிடித்தபோது, அவர் கோபம் அடைந்தார். அப்போது ராஜீவ் தலைமையிலான அரசு எனது விசாரணையை முடக்கியது. போபர்ஸ் லஞ்ச பணம் அந்த கணக்கில்தான் போடப்பட்டது’’ என குற்றம் சாட்டினார்.

இதை அடிப்படையாக வைத்து மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க, சிபிஐ அப்பீல் செய்யும்படி அட்டர்னி ஜெனரல் வாய்மொழியாக ஒப்புதல் தெரிவித்தார். நீண்ட ஆலோசனைக்குப்பின் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ கடந்த பிப்ரவரி 2ம் தேதி அப்பீல் செய்தது.

இதன் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. 13 ஆண்டுகள் தாமதமாக சிபிஐ தாக்கல் செய்த அப்பீல் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பில்  ‘‘2005ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து 4,522 நாட்கள் தாமதமாக அப்பீல் மனு தாக்கல் செய்யப்படுவதற்கான காரணங்கள் எங்களால் ஏற்க முடியவில்லை. இந்த வழக்கில் அஜய் அகர்வால் தாக்கல் செய்த அப்பீல் மனு விசாரணைக்கு வரும்போது அனைத்து காரணங்களையும் சிபிஐ தெரிவிக்கலாம்’’ என உத்தரவிட்டனர்.

அட்டர்னி ஜெனரல் கோரிக்கை

சிபிஐ.யின் அப்பீல் மனு நிராகரிக்கப்பட்டதால் போபர்ஸ் வழக்கை சிபிஐ மீண்டும் விசாரிப்பதை தடுக்காது என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்த வேண்டும் என அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், இது குறித்து தங்கள் உத்தரவில் நீதிபதிகள் எதையும் தெரிவிக்கவில்லை.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: