ஓடென்ஸ்: டென்மார்க் ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் தகுதி பெற்றார். அரை இறுதியில் இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்காவை நேற்று எதிர்கொண்ட சாய்னா அதிரடியாக விளையாடி 21-11 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் 21-11, 21-12 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார். முன்னதாக கால் இறுதியில் ஜப்பானின் நஸோமி ஓகுஹராவுடன் மோதிய சாய்னா 17-21, 21-16, 21-12 என்ற கணக்கில் போராடி வென்றார். இறுதிப் போட்டியில் அவர் சீன தைபே வீராங்கனை டாய் ட்ஸூ யிங்குடன் மோதுகிறார். கடந்த 2012ல் டென்மார்க் ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா, அதன் பிறகு தற்போது தான் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளார்.