தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானோர் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22, 23ம் தேதிகளில் நடந்த போராட்டங்களின் போது போலீசாரின் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி சம்பவங்களில் 13 பேர் பலியாயினர். இந்த வழக்கு சிபிசிஐடியிடமிருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டதையடுத்து, சிபிஐ சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்பி சரவணன், டிஎஸ்பி ரவி தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கடந்த 13ம் தேதி முதல் தூத்துக்குடியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 நேற்று 3வது நாளாக சம்பவம் நடந்த இடங்களை பார்வையிட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு இது தொடர்பாக ஏற்கனவே சிறப்பு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி தூத்துக்குடி காவல்துறையினர் 19 பேருக்கும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அவர்கள் அனைவரும் நேற்று காலை அடுத்தடுத்து சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் சம்பவம் நடந்த அன்று பணியிலிருந்த தாசில்தார் சேகர், வடபாகம் காவல் நிலையம் பகுதியில் நடந்த சம்பவத்திற்கு உத்தரவிட்ட தாசில்தார் கண்ணன், அண்ணாநகரில் நடந்த சம்பவத்தின் போது பணியில் இருந்த தாசில்தார் சந்திரன் ஆகியோருடன் சம்பவ இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து  சிபிஐ அதிகாரிகள் குழு, துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்னோலின், கார்த்திக் உள்ளிட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, சிபிஐ அதிகாரிகள் வீடியோ, போட்டோக்கள், ஆடியோ ரெக்கார்டிங் உள்ளிட்டவற்றை பதிவு செய்தனர்.  பின்னர்  துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த டிஎஸ்பிகள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், ஆயுதப்படையினரிடம் விசாரித்தனர். இன்றும் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடர்கின்றனர்.

கலெக்டர், எஸ்பியிடமும் விசாரிக்க முடிவு

துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது பணியில் இருந்து, தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள எஸ்பி மகேந்திரன், கலெக்டர் வெங்கடேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டு அதற்குரிய துறை ரீதியிலான தகவல் கடிதம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் கோவில்பட்டி கோர்ட்டில் தாக்கலான ஆவணங்கள் மற்றும் சென்னையில் உள்ள ஆயுத அறிவியல் ஆய்வகங்களில் உள்ள ஆவணங்களையும் முறைப்படி பெற சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: