துபாய்: டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி இளம் வீரர்கள் பிரித்வி ஷா, ரிஷப் பன்ட் இருவரும் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளனர்.வெஸ்ட் இண்டீசுடன் நடந்த டெஸ்ட் தொடரில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் அறிமுகமான இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷா (18 வயது), ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டில் 134 ரன் விளாசி சாதனை படைத்தார். அடுத்து ஐதராபாத்தில் நடந்த 2வது டெஸ்டிலும் முதல் இன்னிங்சில் 70 ரன், 2வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 33 ரன் விளாசி தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.விக்கெட் கீப்பரும் அதிரடி பேஸ்மேனுமான ரிஷப் பன்ட், 2 டெஸ்ட் போட்டியிலும் தலா 92 ரன் விளாசி அசத்தினார். துரதிர்ஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் நழுவவிட்டாலும், தனது துடிப்பான பேட்டிங் மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார் பன்ட். இந்திய அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவெடுத்திருக்கும் பிரித்வி, பன்ட் இருவரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்ட தரவரிசை பட்டியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளனர்.